முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு திடீரென தலைதூக்கிய ஒரு குறிப்பிட்ட குழுவினர் முற்றிலும் இரகசியமாகவும், வெளிப்படைத் தன்மையற்ற விதத்திலும் தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவது சம்பந்தமாக ரங்கிரி தம்புளு ரஜமஹா விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கலத் தேரருடன் உடன்பாட்டுக்கு வந்திருப்பதாக 03.06.2014 'டேய்லிமிரர்'ஆங்கில பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியான செய்தி முஸ்லிம்கள் மத்தியில் கவலையையும், பரப்பரப்பையும் தோற்றுவித்திருக்கின்றது என்றும், ஆகையால், இந்தச் செய்தி உண்மையானதா? என்றும், தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரத்தில் பிரதமர் மற்றும் பௌத்த சாசன சமய விவகார அமைச்சரிடம் அவர் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகின்றார் என்றும் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் புதன் கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளையின் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமெனக் குறிப்பிட்டு கேள்வியெழுப்பியதோடு, அறிக்கை ஒன்றையும் விடுத்தார்.
தம்புள்ளை பள்ளிவாசலை ஒரு தொழுகை நிலையம் எனக் குறிப்பிட்டிருப்பதே தவறானது. அது ஒரு நன்கு ஸ்தாபிக்கப்பட்டு, நீண்ட காலமாக அங்குள்ள பள்ளிவாசலாகும். இந்தப் பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளாகி முஸ்லிம்களை பாதிப்படையச் செய்துள்ளது.
ஜெனிவாவில் நடந்த கடந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் கூட்டத்திலும் இங்கு இடம்பெறும் சிறுபான்மை இனத்தவரின் சமய உரிமைகள் மீதான பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. சகிப்புத் தன்மையையும், சகவாழ்வையும் கொண்டாகக் கூறப்படும் தேசத்தின் மீது இந்த விவகாரம் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது.
சட்டபூர்வமாகவும் அத்துடன் ஒரு மாற்று காணியை அடையாளப்படுத்துவதன் ஊடாகவும் இந்த பிரச்சினையை சுமுகமாக கலந்துரையாடி உரிய தீர்வைக் காண்பதாக ஜனாதிபதியும் முஸ்லிம் அமைச்சர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
இவ்வாறிருக்க முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு திடீரென தலைதூக்கிய ஒரு குறிப்பிட்ட குழுவினர் முற்றிலும் இரகசியமாகவும், வெளிப்படைத் தன்மையற்ற விதத்திலும் தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவது சம்பந்தமாக ரங்கிரி தம்புளு ரஜமஹா விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கலத் தேரருடன் உடன்பாட்டுக்கு வந்திருப்பதாக பத்திரிகைச் செய்தி வெளிவந்துள்ளது.
யாருடைய ஏவலினால் உந்தப்பட்டு அந்த சிறுகுழுவினர் இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்? வக்பு சபை, உலமா சபை, முஸ்லிம் வாலிபர் அமைப்பு என்று தங்களைக் கூறிக்கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தையும் இவர்கள் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.
இவர்கள் கண்ட தீர்வு அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு எதனை வழங்கப்போகிறது? அவர்கள் தங்களது சமய நம்பிக்கையை பின்பற்றுவதை தவிர்க்கச் செய்யப் போகின்றதா? பள்ளிவாசலுக்கான மாற்றுக் காணியை பெற்றுத்தருவதற்கு யாராவது அதிகாரம் பெற்றுள்ளனரா?
முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தங்களைக் கூறிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த முன்பின் தெரியாதவர்களோடு கலந்துரையாடுவதற்கு ரங்கிரி தம்புளு ரஜமஹா விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கலத் தேரர் ஏன் உடன்பட்டார்? பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுடன் எந்த விதமான இணக்கப்பாட்டிற்கும் வராத நிலையில் வேறொங்கோர் இடத்தில் பள்ளிவாசல் ஒன்றுக்கான அடிக்கல்லை தாமாகவே முன்வந்து நட்டுவதற்கு ஏன் அவர் விருப்பம் தெரிவித்தார்?
நீதிக்கும், நியாயத்திற்கும் இது பாரதூரமான விளைவை உண்டுபண்ணும். முஸ்லிம் அமைச்சர்களை முற்றிலும் இருட்டில் விட்டுவிட்டு இந்தத் தீர்மானத்தை எடுத்ததை நான் ஆட்சேபிக்கின்றேன். பௌத்த சாசன சமய விவகார அமைச்சரான பிரதமர் இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவாரா? அத்துடன் இந்த விவகாரத்தில் ஓர் இணக்கத்தைக் காண அவர் நடவடிக்கை எடுப்பாரா?
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அப்பொழுது, எதிர்க்கட்சித் தலைவர் அந்த சிறுகுழுவினர் யாரென அமைச்சர் ஹக்கீமிடம் கேட்டார். அவர்கள் யாரென தனக்கே தெரியாதென அமைச்சர் பதிலளித்தார்.
இத்துடன் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஹக்கீம் விடுத்த அறிக்கை முடிவடைகிறது.
இனி, நடந்தது என்ன? ஆங்கில சிங்களப் பத்திரிகைகளில் வெளிவந்தவற்றைப் பார்ப்போம்.
செவ்வாய்க்கிழமை (03) 'டெய்லி மிரர்'ரிலும், புதன்கிழமை 'லங்கா தீப'யிலும் வெளியான செய்திகளின் படி ரங்கிரி தம்புளு ரஜமஹா விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கலத் தேரரை சந்தித்து பள்ளிவாசலை அகற்றுவதற்கு இணக்கம் தெரிவித்தவர்கள் அகில இலங்கை இஸ்லாமியப் போதகர் தேசமானிய அல்ஹாஜ் கலீல் மௌலவி, முஸ்லிம் வாலிப பேரவை டாக்டர். என்.எம்.எம். இக்பால், முகம்மது நியாஸ், முகம்மது பைசல் என்பவர்கள் ஆவர்.
இம்மாதம் முதலாம் திகதி தம்மை வந்து சந்தித்த இவர்களுக்கு ரங்கிரி தம்புளு ரஜமஹா விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கலத் தேரர் தேனீர் விருந்தளித்து உபசரித்ததாகவும் பத்திரிகைச் செய்தியில் காணப்படுகிறது.
இந்த அறிக்கையை நீதியமைச்சர் ஹக்கீம் முன்னதாக செவ்வாய்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் விடுப்பதற்கு ஆரம்பித்த பொழுது அமைச்சர் ஹக்கீம் கட்சித் தலைவர் அல்லர் எனக்கூறி அதற்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அனுமதிக்கவில்லை. பிரதிசபாநயகருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் ஹக்கீம் அறிக்கை விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அப்பொழுது அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இருவருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் உரிய ஏற்பாடுகளுடகன் அமைச்சர் ஹக்கீம் பிரஸ்தாப அறிக்கையை புதன்கிழமை பிற்பகல் பாராளுமன்றத்தில் விடுத்தார்.
0 comments:
Post a Comment