ஊவா மாகாணசபைத் தேர்தல், எதிர்காலத்தில்
நடைபெறவுள்ள தேசிய மட்ட தேர்தல்களின் முன்னோடி என்று தேர்தலுக்கு
முன்னேரேயே நாம் சொன்னோம். அது இன்று சரியாக நடந்து விட்டது. இந்த
தேர்தலில் மக்கள், குறிப்பாக சிங்கள மக்கள், அரசாங்கத்துக்கு ஒரு செய்தியை
கூறியுள்ளார்கள். யுத்த வெற்றி என்ற கோஷத்தை அரசியல் சந்தையில் விலைக்கு
வாங்க இனிமேலும் நாங்கள் தாயரில்லை என்று அரசாங்கத்துக்கு அவர்கள்
சொல்லியுள்ளார்கள். இதனால் யுத்த வெற்றி என்ற கோஷத்தின் மீதான கவர்ச்சி
குறைந்து வருவது இப்போது கண்கூடாக தெரிகிறது.
இதன்மூலம், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மகிந்த சிந்தனை ஆட்சியே என்ற கனவுக்
கோட்டை தகர தொடங்கிவிட்டது. இது இன்று அரச உயர் மட்டத்தை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியுள்ளது. 2040 வரை ராஜபக்சர்களின் ஆட்சியே என்று கூறி தங்கள்
தடம்புரள்கைகள், தடுமாற்றங்கள் மற்றும் அரசாங்கத்தின் மனித உரிமை
மீறல்கள், இன-மதவாத கொள்கைகள் ஆகிய அனைத்து குற்றங்களையும் மூடி மறைக்க
எத்தனித்தவர்களின் கனவுகளில் மண் விழுந்து விட்டது என ஜனநாயக மக்கள்
முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
ஊவா மாகாண மக்கள் எதிரணிக்கும் ஒரு செய்தியை தந்தார்கள். குறிப்பாக
உட்கட்சி சச்சரவுகளை தீர்த்து கொள்ளுங்கள் என்று பிரதான எதிர்கட்சிக்கு
சொன்னார்கள். இந்த செய்தியை சிரமேற்கொண்டு ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க
தனது கட்சிக்குள்ளே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்த
மாற்றங்கள் சிறந்த பெறுபேறுகளை தர வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
ஆனால், அரசாங்கத்துக்கான செய்திதான் பிரதானமானது. அதை கணக்கில்
எடுக்கும்படி அரசுக்கு நான் கூறுகிறேன். கனவுலகில் இருந்து இறங்கி வந்து,
தரையில் நிகழும் மாற்றங்களையும், யதார்த்தத்தையும் கண்களை திறந்து
பார்க்கும்படி அரசாங்கத்துக்கு நான் கூறுகிறேன். ஏனென்றால் இத்துனை பெரிய
வீழ்ச்சியையும் மூடி மறைத்து ஒன்றுமே நடக்கவில்லை என அரசின் அமைச்சர்கள்
சமாளிக்க தொடங்கியுள்ளார்கள்.
எதிரணியினர் அனைத்து துருப்பு சீட்டுகளையும் பயன்படுத்தி இந்த பெருபேறுகளை
பெற்றுள்ளார்கள், என அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க கூறுகிறார். இவர் ஒரு
சுத்துமாத்து பேர்வழி. இவரது இந்த கதையும் ஒரு சுத்துமாத்து கதை. உண்மையில்
அரசாங்கம்தான் தனது மிகப்பிரதான துருப்பு சீட்டை பயன்படுத்தியது. அந்த
சீட்டின் பெயர் மகிந்த ராஜபக்ச. இதைவிட வேறு ஒரு துருப்பு சீட்டு அங்கு
இல்லை. ஜனாதிபதி மகிந்த, தெருத்தெருவாக, வீடுவீடாக , கிராமம் கிராமமாக
சென்று, வாக்கு சேகரித்தார். இதை நாம் ஊவாவில் இருந்து பார்த்தோம். இப்படி
தங்கள் ஒரேயொரு அதியுயர் துருப்பு சீட்டை பயன்படுத்திதான் இந்த அற்ப
பெறுபேற்றையாவது அரசாங்கம் பெற்றுக்கொண்டது.
நாங்கள் ஒரு இளைஞனை மட்டுமே பயன்படுத்தினோம். அந்த இளைஞனின் பெயர் ஹரின்.
எதிர்காலத்து தேர்தல்களுக்கு நாம் பயன்படுத்தும் துருப்புகள் பல உள்ளன.
உரிய நேரத்தில் அவை வெளிவரும். இனியாவது திருந்துங்கள். இனவாதத்தையும்,
மதவாதத்தையும், அடிப்படை வாதத்தையும் பயன் படுத்தி , சோரம் போனவர்களை
பயன்படுத்தி எங்களை ஆள நினைக்காதீர்கள்.
0 comments:
Post a Comment