• Latest News

    September 13, 2014

    முஸ்லிம் மாவட்டம் என்கின்ற எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடும் முஸ்லிம் காங்கிரஸ்

    முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் தேசியப் பட்டியல் எம்பியுமான அம்பாறை மாவட்டம் நிந்தவூர் ஹசன் அலி கடந்த வாரம் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை அரசுடன் செய்த ஒப்பந்தப்படி முஸ்லிம் காங்கிரஸ் உரிய காலத்தில் பெற்றுக் கொள்ளுமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

    அவரது பதிலில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் அரசுடன் காங்கிரஸ் பல வகையான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டமை உண்மையே. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் முதலமைச்சர் விடயம் மட்டுமல்ல பல விடயங்கள் உள்ளன.
    அதில் கரையோர மாவட்டக் கோரிக்கையுள்ளது. அதை உடனடியாகத் தரமுடியாவிட்டால், உடனடியாக மேலதிக மாவட்டச் செயலாளர் பணிமனையொன்று திறக்கப்பட வேண்டுமென்றும் கோரியுள்ளோம். அரசு அதை ஏற்றுக் கொண்டது என்று தெரிவித்துள்ளார் ஹசன் அலி.

    ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் முதலமைச்சர் பதவி என்பதை விடவும் கரையோர முஸ்லிம் மாவட்ட விடயமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விட முடியாது.

    வெறும் பதவியாகவே அது இருக்கும். சமூகத்திற்குக் கிடைத்த கௌரவமான பதவியாக அது இருக்கலாம். அது தனிமனிதனுக்கு முடிசூட்டும் விடயமாகவேயிருக்கும். இதைவிடக் கரையோர மாவட்டம் கிடைத்தால் அது அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுக்கு முடிசூட்டும் விடயமாகவே மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவு செய்யத்தக்கதாகவும் அமையும் என்றார்.

    ஆனால் அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை என்பது வேறுகதை. அப்படியொரு ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை.

    கரையோர மாவட்டக் கோரிக்கை

    கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்பு நிந்தவூரில் இருந்த ஹசன் அலி அம்பாறை மாவட்ட மு.கா. செயற்குழு என்கின்ற கூட்டமொன்றை கடந்த வருடம் கூட்டினார். அப்போது இந்த கரையோர மாவட்டம் என்கின்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    இதுவரை காலமும் கரையோர மாவட்டம் என்று சொல்லி வந்த மு.கா. இப்போது முஸ்லிம் கரையோர மாவட்டம் என்ற புதிய உசுப்பேற்றலை ஆரம்பித்துள்ளது.

    இது முஸ்லிம் ஈழம் மாதிரி இல்லையா. இது ஒரு நிறைவேறாத நப்பாசை மாதிரியில்லையா. இந்த முஸ்லிம் ஈழத்திற்கு சில அறிவிலிகள் ஆடுவார்கள். இது சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்று அமையப் போகின்றது.

    இந்த முஸ்லிம் மாவட்டம் என்பதன் எதிரொலி முஸ்லிம் பிரதேசம் எங்கும் சிங்களப் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படலாம். இதை இப்படியும் சொல்லலாம், தவளை தன்வாயால் கெடுமாம்.

    இது நடக்கும் விடயமா. ஏற்கனவே பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் மாவட்டம் அல்ல. முஸ்லிம் ஈழம் என்று ஒரு தேவையில்லாத வம்பையும் புரளியையும் கிளப்பி விட்டுள்ளார்கள்.

    நாம் முன்வைக்கும் சவால்

    மு.கா இந்த அரசில் மு.கா. மதிப்பும் மரியாதையுமாக இருந்தால் அம்பாறைக்கு ஒரு தமிழ் பேசும் அரச அதிபரை கொண்டு வர முடியுமா.? பொது பலசேனாவின் சிபார்சின் பெயரில் கல்முனையயின் வரலாற்றிலே முதன் முதலாக நியமிக்கப்பட்டுள்ள சிங்கள பிரதேசச் செயலாளரை இடமாற்றிவிட்டு தமிழ் பேசும் செயலாளர் ஒருவரைக் கொண்டு வர முடியுமா?

    அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஒலுவில் ஏழை விவசாய மக்களின் பறிக்கப்பட்ட விவசாயக் காணிகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமா? அண்மையில் இராணுவத்தால் பறிக்கப்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் மக்களின் குடியிருப்புக் காணிகளை மீட்டுத்தர முடியுமா?

    முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவி

    கடந்த இரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் மு. கா. தலைவர் முதலமைச்சர் பதவிக்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போது இந்த ஹசன் அலிக்கு அந்த முதலமைச்சர் பதவி என்பது தனிநபரை திருப்திப்படுத்தும் பதவி என்று தெரியவில்லையா?

    முதலமைச்சர் பதவி என்பது எதுவும் சாதிக்க முடியாது என்று அப்போது ஹசன் அலிக்குத் தெரியவில்லையா. கிழக்கில் மு.கா முதலமைச்சர் என்னும் பொம்மை முதல்வர் ஆட்சியை ஒழிப்போம் என்றுதானே கிழக்கு மாகாணம் முழுவதும் பிரச்சாரம் செய்தீர்கள். அஷ்ரப்பின் கனவு என்றெல்லாம் மக்களை ஏமாற்றினீர்கள்.

    தமிழ் கூட்டமைப்பு முதல்வர் பதவியைத் தருகின்றோம் என்று பகிரங்க அழைப்பு வந்த போதும் அதை நிராகரிக்கும் போது வெறும் பொம்மை முதல்வர் என்று தெரியவில்லையா? சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக் கதை மாதிரியில்லையா?

    இரண்டரை வருடங்கள் முடிந்த பின்பு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முதலமைச்சரைப் பெறும் என்று அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக இன்று வரையும் மு.கா. சொல்லி வருகின்றது. ஆனால் அப்படியொரு ஒப்பந்தம் இல்லவே இல்லையென்று அரசு சொல்கின்றது.

    ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகின்றது. இனிமேல் மு.கா கிழக்கு மாகாண முதலமைச்சர் பற்றி அரசிடமோ அல்லது வேறு எங்குமோ வாய் திறக்காது. எதிர்வரும் பெப்ரவரியில் கிழக்கு முதலமைச்சரின் இரண்டரை ஆண்டு பதவிக் காலம் முடிவடைகின்றது. அப்போது இந்த முதலமைச்சர் பதவி பற்றிப் பார்ப்போம். இனிவரும் காலங்களில் முஸ்லிம் மாவட்டம் என்ற முஸ்லிம் ஈழத்தைக் கோரி நிற்பார்கள்.

    ஹசன் அலிக்கு முஸ்லிம் கரையோர மாவட்டம் வேண்டுமாம். அதற்கு முன்னோடியாக கல்முனையில் மேலதிக அரச அதிபர் பணிமனையாம். இப்போது புதிய புரளியொன்றாக இந்த முஸ்லிம் கரையோரக் கச்சேரி என்ற வித்தையை எடுத்து விட்டுள்ளார்கள்.

    ஏற்கனவே இயங்கிய மேலதிக அரசாங்க அதிபர் பணிமனை

    ஏற்கனவே சுனாமி நிவாரணப் பணிகளுக்காக 2005 ஆம் ஆண்டு கல்முனையில் தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வந்த மேலதிக கரையோர கச்சேரியை மூடிவிடும்படி கடந்த 2009 ஆம் ஆண்டில் அரச உத்தரவொன்று கிடைத்ததனால் கல்முனை கரையோர மேலதிக கச்சேரி மூடப்பட்டு விட்டது.

    சுனாமி பாதிப்புக்களைக் கவனிப்பதற்காக பொத்துவில் தொட்டு பெரிய நீலாவணை பகுதிகளிலுள்ள சுனாமி பாதிப்புக்களை மேற்பார்வை செய்வதற்காகவே கல்முனை மேலதிக அரசாங்க அதிபர் ஏற்படுத்தப்பட்டது.

    அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய யூ.எல்.ஏ.அஸீஸ் என்பவர் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். கல்முனையில் இந்தப் பணிமனை இயங்கியது.

    தற்போது இந்த மேலதிக கச்சேரி அம்பாறைக் கச்சேரியுடன் மீண்டும் இணைக்கப்பட்டு விட்டது. அதனால் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய இவர் கிழக்கு மாகாண சபைக்குள் சென்றுவிட்டார்.

    அதிகாரமில்லாத மேலதிக அரச அதிபர்

    மேலதிக அரசாங்க அதிபர் பதவி என்பது ஒரு பிரதேச செயலாளருக்கு இருக்கின்ற அதிகாரம் கூட இல்லை. அப்படிப்பட்ட மேலதிக அரசாங்க அதிபர் என்பது அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரசுக்கு தில் இருக்குமானால் அம்பாறை மாவட்ட கரையோரக் கச்சேரியை விட இந்த அரசில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக தமிழ் பேசுபவரை பெற்று ஜெயித்துக் காட்ட வேண்டும்.

    இந்த டிமாண்டை கிழக்கு மாகாண ஆட்சி அமைப்பின் போது காட்டியிருக்க வேண்டும். அதைவிட்டு மக்களை ஏமாற்றும் மாயா ஜாலங்கள் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

    முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் என்பதையும் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உள்நோக்கம் கொண்டு மு.கா 3 எம்பிக்களைப் பெறும் எண்ணத்தில்தான் இந்த முஸ்லிம் மாவட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

    கல்முனையில் சிங்கள பிரதேசச் செயலாளர்

    இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு முதன் முதலாக கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளராக சிங்களவர் நியமிக்கப்பட்டுள்ளார். மகாஓயா பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய மொகான் விக்கிரம ஆராச்சியை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மாதம் நியமித்துள்ளது.

    இது கல்முனை மட்டுமல்ல, கல்முனை கரையோரப் பகுதி முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் அச்சம் அடைந்துள்ளார்கள். வடக்கு மாகாணம் முழுவதம் தமிழ் மக்களின் காணிகளைச் அரசும் அரசின் வகையறாக்களும் அத்து மீறிப் பிடித்துக் கொண்டு சிங்கள மயமாக்கி வருகின்ற நிலையில் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதானது கல்முனை பகுதி சிங்கள மயமாக்கலுக்கான ஒரு முன்னேற்பாடு எனலாம்.

    அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் இதயப்பகுதி கல்முனை. காலம் சென்ற அஷ்ரப்பின் கனவு அம்பாறை கரையோர மாவட்டம். அதாவது பொத்துவில் தொட்டு நாவிதன்வெளி வரையுமான 11 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி கல்முனை கரையோர மாவட்டம் உருவாக்குவது என்ற கோசத்துடன்தான் மு.கா கிளம்பியது.

    கல்முனை கரையோர மாவட்டம் என்பது மு.காசின் மூன்று எம்பிக்கள் பெறுவது என்ற நப்பாசையில்தான் மீண்டும் இந்தக் கரையோர மாவட்டம் கிளம்பியுள்ளது.

    கரையோர மாவட்டம் என்பது அதாவுல்லாவைத் தோற்கடிக்கும் திட்டம்

    மு.கா சின் கரையோர மாவட்டம் என்பது தனியான முஸ்லிம் இராஜ்ஜியம் என்ற ஒன்றை அமைத்து மூன்று எம்.பிக்களை அடைவது. அதாவது பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை தொகுதிகளை உள்ளடக்கி மூன்று எம்பிக்களை அடைவது அதனால் மு.கா தவிர்ந்த வேறு எவரும் இந்தக் கரையோர மாவட்டத்தில் வெற்றியடைய முடியாத நிரையை உருவாக்குதல்.

    குறிப்பாக அமைச்சர் அதாவுல்லாவை தோற்கடிக்க வைப்பதற்கான திட்டம்தான் மு.கா சின் கரையோர மாவட்டக் கோரிக்கையாகும். மு.கா வுக்கு ஒரு பெருத்த இடையூறாக பார்க்கப்படுவது அமைச்சர் அதாவுல்லா அதனால் அதாவுல்லாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் மு.கா காய் நகர்த்தி வருகின்றது.

    அதாவுல்லா எப்போதும் சிங்கள மக்களின் வாக்குகள் மூலமாகத்தான் வெற்றியடைந்து வருகின்றார். அதாவுல்லாக்கென்று தனது பிரதேசத்தில் சுமார் 25 ஆயிரம் வாக்குகளை வைத்துள்ளார்.

    மேலதிகமாக சிங்கள மக்களின் மனாப்பை வாக்குகள் மூலமாக தனது வெற்றியை ஊர்ஜிதம் செய்துவருகின்றார். இந்த நிலையில்தான் மு.கா சின் அம்பாறை கரையோர முஸ்லிம் மாவட்டக் கோரிக்கையை மு.கா ஆரம்பித்துள்ளது.

    முஸ்லிம் மாவட்டம் அமையுமானால் அதாவுல்லா வெற்றியடைய முடியாது.அதாவுல்லாவுக்கு ஆப்படிக்கவும் 3 எம்பிக்களைப் பெறவும்தான் இந்தப் புதிய புரளி எடுத்து விடப்பட்டுள்ளது.

    தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளி விடுவதா?

    தமிழ் மக்களின் போராட்டங்களிலும் குருதியிலும் கிடைக்கப்பெற்ற சுகபோகங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு நோகாமல் நொங்கு சாப்பிட்டுக் கொண்டு அம்பாறையில் முஸ்லிம் இராஜ்ஜியம் அமைத்தால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை கடலில் கொண்டு தள்ளிவிடுவதா.

    ஏற்கனவே அம்பாறையில் மட்டுமல்ல நாடு முழுவதும் தமிழ் மக்களையும் தமிழ் அரசியலையும் ஒரங்கட்டி ஒதுக்கி வருகின்ற மு.கா முஸ்லிம் மாவட்டம் அமைத்தால் தமிழ் மக்களின் கெதி அதோ கதிதான். அம்பாறையில் மு.கா 3 எம்பிக்களைப் பெறுவதற்காக முஸ்லிம் மாவட்டம் என்ற பூச்சாண்டியை கிளப்பிட்டாங்கய்யா.

    முஸ்லிம் மக்களையே ஏலம் போட்டு விற்கின்ற இந்த வியாபாரிகள் முஸ்லிம் மாவட்டத்திற்குள் சிறுபான்மையினமாக தமிழ் மக்களை மாற்றிவிட்டு தமிழ் மக்களையும் விற்று விடுவார்கள்.

    இந்த முஸ்லிம் மாவட்டத்திற்கு தமிழ் மக்களின் சார்பாகவோ அல்லது அமைச்சர் அதாவுல்லாவோ அல்லது வேறு எந்தத் தரப்புக்களோ எந்த விதமான ஆதரவும் அளிக்காது. இந்தப் புரளியை மக்கள் நம்பாதீர்கள். இது எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்ட நிலைதான்.

    முஸ்லிம் மாவட்டம் என்ற கோரிக்கை வந்தாலும் தமிழ் மக்களின் ஆசீர்வாத்துடன் பெறலாமேயொழிய சும்மா புதுப் புது வித்தைகளை எடுத்து விடக் கூடாது. கனவிலும் நடக்காத விடயம் இது. மக்களே நம்பாதீர்கள்.

    பொதுத் தேர்தலுக்காக விடப்பட்ட புரளி 

    மு.கா சின் இந்த முஸ்லிம் மாவட்டம் நடக்கின்ற விடயமல்ல. ஆனால் எதிர் வருகின்ற பொதுத் தேர்தலுக்கு அந்தப் புரளியை பயன்படுத்துவார்கள். தற்போது மு.கா அம்பாறையில் களை இழந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஏதாவது ஒரு புரளியை எடுத்து விட வேண்டிய தேவை மு.கா வுக்கு உள்ளது.

    அதனால்தான் இப்போது இந்த முஸ்லிம் மாவட்டம் என்ற வித்தையைக் கிளப்பி விட்டுள்ளார்கள். இந்த வித்தையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையுள்ளது. அதனால் இந்த வித்தையை தமிழ் மக்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள். விரம்பவும் கூடாது.

    இன்னும் இன்னும் தமிழ் மக்களின் அடிமடியில்தான் இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கைவைக்கின்றார்கள். மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக தமிழ் மக்களின் நிலையுள்ளது.

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அம்பாறையில் தமிழ் மக்களை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டு முஸ்லிம் இராஜ்ஜியம் அமைக்கப் போகின்றார்களா அல்லது முஸ்லிம் ஈழம் அமைக்கப் போகின்றார்களா. என்ன வேசம் இது. என்ன கோசம் இது. இதையும் முஸ்லிம் அறிவிலிகள் நம்புவார்களா?

    முஸ்லிம்களுக்கென்று தனியான ஒரு தீர்வு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு அமையும் போது மட்டுமே தமிழ் மக்கள் சார்ந்த தீர்வொன்றை எதிர்பார்க்கலாம் அதைவிட்டு முஸ்லிம் ஈழம் முஸ்லிம் மாவட்டம் என்பதெல்லாம் சும்மா டூப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களே நம்பாதீர்கள் நம்மை ஏமாற்றிப் பிழைப்பதற்கு இந்த வித்தையை எடுத்து விட்டுள்ளார்கள்.

    ஏமாந்தது போதும். இனிமேலும் நாம் தமிழ் மக்களை ஒதுக்கிவிட்டு அல்லது ஓரங்கட்டிவிட்டு எதுவும் நடக்காது. தமிழும் தமிழ் மக்களும் எமது வாழ்வோடு கலந்து விட்ட விடயம்

    நம்மைப் பிரிக்க எடுத்து விடப்பட்ட மோசடி

    விரைவில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் மு.கா வகையறாக்கள் மக்களிடம் வாக்கு வேட்டைக்காக வரும் போது எங்கே மு.கா சின் முதலமைச்சர் என்று மக்கள் கேட்டால் அது தனி மனிதனைக் கௌரவப்படுத்தும் பதவி அந்தப் பதவியினால் எதுவும் சாதிக்க முடியாது ஆனால் முஸ்லிம் மாவட்டம்தான் வேண்டும் என்று ஒரு வித்தையைக் காட்டவுள்ளார்கள்.

    அம்பாறை மாவட்டத்தில் சில அறிவிலிகள் நம்புவார்கள். இந்த வகையறாக்கள் வரும் போது நாரே தக்பீர் என்பார்கள் முஸ்லிம் மாவட்டம் கிடைத்து விடும்.காற்றில் பறப்போம், மின்னலைப் பிடிப்போம், கடலில் நடப்போம் என்பார்கள் இந்த முஸ்லிம் காங்கிரஸ் வகையறாக்கள். அதையும் நம்மாளுங்க நம்புவார்கள். நம்புங்க நல்லா நம்புங்க.

    ஏமாளிகளாக முஸ்லிம் மக்கள் உள்ளவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் எம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். முஸ்லிம் மக்கள் மாறாதவரை இந்த வக்காலத்துக் கூட்டம் இப்படித்தான் எம்மை ஏமாற்றுவார்கள்.

    இறுதியாக தமிழ் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையக் போகின்றது என்ற வித்தையைக் காட்டுவார்கள் ஆனால் அதுவும் பொய் நாடகம்தான்.

    எம்.எம்.நிலாம்டீன்mmnilamuk@gmail.com

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் மாவட்டம் என்கின்ற எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடும் முஸ்லிம் காங்கிரஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top