கரையோர மாவட்டத்தின் அவசியத்தை அரசுக்கு உணர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமையன்று அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தன்னை கரையோர மாவட்ட உருவாக்கத்திற்கு எதிரானவராகச் சித்திரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மு.கா.வின் செயலாளர் ஹஸன் அலி எம்.பி.க்கு எழுதிய கடிதம்
எனது பாராளுமன்ற உரைகள் அடங்கிய 'சோர்விலாச்சொல்' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நடைபெற்றபோது நான் நிகழ்த்திய உரையில் கரையோர மாவட்டம் முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அல்லவென்று தெரிவித்திருந்தேன்.
எனது இக்கருத்தை கரையோர மாவட்டம் தேவையில்லையென்று நான் கூறியது போல திரிவுபடுத்திக் காட்டி தனிப்பட்ட முறையில் எனக்கு எதிராக ஓர் அரசியல் கண்டனத் தீர்மானம் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டிப்பதோடு இதனைக் கட்சியின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். இது சம்பந்தமாக கட்சி நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கோருகிறேன்.எனது பாராளுமன்ற உரைகள் அடங்கிய 'சோர்விலாச்சொல்' நூல் வெளியீட்டு வைபவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி நடைபெற்றபோது நான் நிகழ்த்திய உரையில் கரையோர மாவட்டம் முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அல்லவென்று தெரிவித்திருந்தேன்.
மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை கட்சிக்குப் பெரும் மதிப்பளித்து தொடர்ச்சியாக அட்டாளைச்சேனை மக்கள் அளித்துவரும் ஆதரவுக்காக அப்பிரதேச மக்களுக்கு எனது அதீத மதிப்பையும் கண்ணியத்தையும் எப்போதும் செலுத்தி வருகின்றேன்.
முஸ்லிம்களின் தேசியப்பிரச்சினை என்பது பாதுகாப்பும் காணிப்பிரச்சினையுமே என்பதைக் கட்சிக் கூட்டங்களில் தொடர்ச்சியாகக் கூறிவந்துள்ளேன். இதுவே இப்போதும் கூட எனது உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இதேநேரம் வட, கிழக்கைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கான தீர்வு என்பது நிலத்தொடர்பற்ற தென் கிழக்கு அலகே அன்றி வேறில்லை என்பதும் என் நிலைப்பாடாகும்.
அஷ்ரப் இனப்பிரச்சினைத் தீர்வில் நிலத்தொடர்பற்ற தென்கிழக்கு அலகுதான் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் தீர்வாகும் என்பதை மிகத்தெளிவாகக் கூறி விட்டே மறைந்துள்ளார். இவ்வலகு விடயத்தில் அவர் கொண்ட திருப்திதான் 2000ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவினால் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பினை பாராளுமன்றில் முன்மொழிந்து மூன்று மணி நேரமாக உரையாற்றக் காரணமாகியது. தென்கிழக்கு அலகைப் பெறுகின்றபோது இதன் இன்னொரு பெறுபேறாக கரையோர மாவட்டம் தானாகவே சாத்தியமாகும் என்பதே அவரின் பார்வையாகவும் தர்க்கமாகவும் இருந்தது. முஸ்லிம்களின் அரசியல் நிர்வாக அபிலாஷையில் முதலாவது அம்சம் தனி அலகு என்பதாகும். இரண்டாவது அம்சம் கரையோர மாவட்டமாகவும் இருக்க முடியும் என்பதே என் என்றென்றைக்குமான நிலைப்பாடாகும்.
தென்கிழக்கு அலகு என்பது அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கிற சம்மாந்துறைஇ பொத்துவில்இ கல்முனை ஆகிய முஸ்லிம் பெரும்பான்மை தொகுதிகள் மூன்றையும் மாத்திரமே உள்ளடக்கிய ஓர் அலகு என்று அப்புதிய யாப்பில் மொழியப்பட்டிருந்தமையால் ஏனைய வட கிழக்கின் முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளில் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பிய போதும் அவ்வலகுக்கு ஆதரவளித்தவன் நான். அக்காலத்தில் 'அகண்ட தென்கிழக்கு' என்பதைப் பரிந்துரை செய்து அத்தலைப்பில் புத்தகம் ஒன்றையும் எழுதியிருந்தேன். இப்புத்தகத்தைத் தலைவர் அஷ்ரப் கட்சியின் உத்தியோகபூர்வ வெளியீடாக வெளியிட்டிருந்தார்.
எந்த மூலையிலாவது ஒரு கைக்குட்டையளவினதாயினும் முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஓர் அலகு அவசியம் என்பதில் உறுதியாகவே இருந்தேன். வடக்குஇ கிழக்கிலே அம்பாறைக்கு வெளியில் இருந்த அன்றைய பல முஸ்லிம் காங்கிரஸ் பிராந்தியத் தலைவர்களும் அப்பகுதி முஸ்லிம்களும் தென்கிழக்கு அலகுக்கு எதிரான கருத்தரங்குகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர் என்பதையும் இவ்விடத்தில் நினைவுகூருகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதியாக இருந்தபோதும் தென்கிழக்கு அலகை ஆதரித்ததில் நான் இனவாதம்இ மதவாதம்இ பிரதேசவாதம் என்பன கடந்தும் வாக்குவேட்டை அரசியலைத் துறந்தும் செயற்படுகின்றேன் என்கிற மன நிறைவு எனக்குண்டு.
2001 –- 2004ஆம் ஆண்டு வரையான முஸ்லிம் காங்கிரஸ் பங்காளியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கமைய அரசினால் கரையோர மாவட்டத்திற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபோது கரையோர மாவட்டச் செயலகம் எந்த ஊரில் அமைவது என்கிற விடயத்தில் உடன்பாடு எட்டமுடியாத பிரதேசவாதப் பிரச்சினையினால் வாய்க்கெட்டிய மாவட்டம் கைக்கெட்டாமல் போனமையையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
இலங்கையில் இனப்பிரச்சினை விவகாரத்தில் தவிர்க்க முடியாதபடிக்கு பிராந்தியப் பங்காளியாக இருக்கின்ற இந்தியாவின் அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இனப்பிரச்சினையினால் உற்பத்தியான ஆயுதப்போராட்டத்தின் விளைவாக உயிரிழந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒரு தசாப்த கால ஆட்சி மாறி தற்போது பாரதீய ஜனதாக் கட்சியின் மோடி கைக்குச் சென்றிருக்கிறது.
புதிதாக ஆட்சியமைத்துள்ள பிரதமர் மோடி இலங்கையின் அரச தலைவர்களை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு முன்னுரிமையளித்து சந்தித்துள்ளார். இச்சந்திப்பில் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசின் மீது தாம் அழுத்தம் பிரயோகிக்கவுள்ளதாக தமிழ் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசுவதற்குத் தயார் என்று அறிவித்துள்ளமையும் பல முட்டுக்கட்டைகள் இருந்த போதும் அதனைக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளமையும் முக்கிய அரசியல் நிகழ்வாகும்.
இவ்வாறான ஒரு தேசிய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸும் வட, கிழக்கு வாழ் முஸ்லிம்களும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமது பங்கு பற்றிய கரிசனையை முன்னிலைப்படுத்தல் வேண்டும். பேச்சுவார்த்தையில் தனித்தரப்பு, முஸ்லிம் பெரும்பான்மை அரசியல் அலகு ஆகிய முஸ்லிம்களின் இரண்டு பிரதான கோரிக்கைகளும் கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்து நாம் செய்துவந்த அடையாள அரசியல் தேய்வினால் இன்று மங்கி ஒளியிழந்து போயுள்ளன.
ஆனால்இ தமிழ் மக்கள் இவ்வளவு அழிவுகளைச் சந்தித்த பின்னரும் 'நாங்கள் தோற்றுவிட்டோம். ஆனால் யாருக்கும் அடிமையில்ல' என்று நிரூபித்த வண்ணம் உறுதியாக தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்த் தேசிய இனத்துவ அரசியலின் புதிய போக்கில் போராளிகள் என்ற பதம் போராட்டக்காரர்கள் என்றும் பொடியன்கள் என்பது மக்கள் என்றும் உருப்படியான வடிவ மாற்றம் பெற்றுள்ளமையை முஸ்லிம் தேசிய அரசியல் கவனப்படுத்தி மதிப்பளித்து செயற்படுதல் வேண்டும்.
இக்கால கட்டத்தில் எந்த வகையிலும் முஸ்லிம்களுக்கான தீர்வு என்பதை சுருக்கிக் கொள்ளக்கூடாது.
விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தை நுனிப்புல் மேய்வதாக இருக்கக்கூடாது.
அரசுடனான பேச்சுவார்த்தையில் தமிழ்த் தரப்பும் முஸ்லிம் தரப்பும் இணைந்த ஒரு தரப்பாக கலந்துகொள்வது அல்லது உடன்பாடு எட்டிய நிலையில் தனித்தனி தரப்புக்களாகக் கலந்துகொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய வேண்டும்.
ஒரு தரப்பை மறு தரப்பின் அரசியல் அபிலாஷையைத் தட்டிப்பறிப்பதற்கான கருவியாக அரசுகள் பாவிக்கும் வாய்ப்புண்டு.
ஒட்டுமொத்த வட, கிழக்கில் முஸ்லிம் தரப்பை தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ்த் தரப்பை முஸ்லிம்களுக்கு எதிராகவும் பாவிக்கும் சாத்தியப்பாட்டை முறியடிக்கும் வகையில் சிறுபான்மை தரப்பு கள வியூகம் அமைத்துச் செயற்பட வேண்டும்.
தீர்வில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷையான வட, கிழக்கு இணைப்பில் முஸ்லிம் தரப்பு எவ்வாறு உதவலாம் என்றும் அவ்வாறே முஸ்லிம் மக்களின் அடிப்படை அரசியல் விருப்பான நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பான்மை அலகு என்பதை எவ்வாறு குறைந்தபட்சமேனும் தமிழ்த் தரப்பு அங்கீகரிக்கலாம் என்பது பற்றியும் கலந்துரையாட வேண்டும்.
கரையோர மாவட்டத்துக்கான அங்கீகாரத்தையும் அனுசரணையையும் தமிழ் தரப்பு எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதையும் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் அமைய வேண்டும் என்கிற அப்பகுதி தமிழ் மக்களின் விருப்பத்தை முஸ்லிம் தரப்பு எவ்வாறு அங்கீகரித்து சாத்தியப்படுத்தலாம் என்பதையும் பற்றி கலந்துரையாட வேண்டும்.
இந்த அடிப்படையான மூன்று விடயங்களிலும் வட,கிழக்கில் வாழும் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தரப்புக்களும் புரிந்துணர்வு உடன்பாட்டிற்கு வரமுடியாவிட்டால் முஸ்லிம்களின் தனித்தரப்பு நிலத்தொடர்பற்ற அரசியல் அலகு, கரையோர மாவட்டம் ஆகிய விருப்புகளுக்கு எதிராக தமிழ் மக்களையும் வட,கிழக்கு இணைவு, கல்முனைத் தமிழ் பிரதேச செயலக அமைவு ஆகிய தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களையும் வழமை போல சிங்கள அரசியல் தலைமைகள் பயன்படுத்தும் வழமையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மீண்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தீர்மானத்திற்கு வருகிறேன். இப்பிரதேச சபை உறுப்பினர்கள் கரையோர மாவட்டத்திற்கு எதிரானவனாக என்னைக் காட்டுவதற்கு தீர்மானம் எடுப்பதற்குப் பதிலாக, கரையோர மாவட்டத்தின் அவசியத்தை அரசுக்கு உணர்த்தும் வகையில் ஆதரவுத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
இப்பிரதேச சபை தவிசாளரும் உறுப்பினர்களும் உண்மையிலேயே கரையோர மாவட்ட உருவாக்கத்தில் அக்கறையுடையவர்களாக இருப்பின் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியில் உள்ள எல்லா உள்ளூராட்சி சபைகளிலும் ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றுமாறு வேண்டுகோள் விடுத்திஇருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டுக்கு வந்து வட கிழக்கில் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா சபைகளிலும் ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்திருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீடத்திற்கு கரையோர மாவட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துங்கள் என்று கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
கரையோர மாவட்டம் என்பது வெறும் நிர்வாக மாவட்டமா அல்லது முழுமையான தேர்தல் நிர்வாக மாவட்டமா என்பதைப் பற்றி ஆகக்குறைந்தது அட்டாளைச்சேனை பிரதேச சபையிலாவது தெளிவாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும்இ எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் கட்சியின் அரசியல் அதியுயர் பீடமே அதனைச் செய்ய முடியும் என்பதையும் இவ்விடயம் சம்பந்தமாக கட்சி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தீர்மானம் தனிப்பட்ட முறையில் என்னை இலக்குவைத்து எடுக்கப்பட்டது என்பதில் எனக்கு சந்தேகமில்லை என்பதையும் உறுதியாகக் கூறுகிறேன்.
எனவே, இவ்விடயம் சம்பந்தமாக என்னையும் மேற்படி சபை உறுப்பினர் களையும் அரசியல் உயர்பீடம் முன்னிலை யில் விசாரிக்க அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வீரகேசரி.
0 comments:
Post a Comment