• Latest News

    September 12, 2014

    அல்-கைதாவினது அறிக்கையும், இலங்கையும்...!!

    துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
    தெற்காசிய நாடுகளான இந்தியா, இந்தனோசிய, பர்மா போன்ற நாடுகளில்  தனது கிளையை நிறுவ உள்ளதாக அல்-கைதா அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாகிரியின் அறிவிப்பானது பல தெற்காசிய நாடுகளிற்கும் 'வயிற்றிற்குள் புளியைக் கரைத்தாய்ப் போலான' செய்தியாய் அமைந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாது அல்-கைதாவை எதிர் கொள்ள பல நாடுகளும்  தயாராகி வருகின்றன.

    இலங்கை நாட்டை தனது பேச்சினுள் அல்-கைதா அமைப்பின் தலைவர் குறிப்பிட்டு உள்ளடக்காது போனாலும் 'தெற்காசியாவில் தங்களது கொடியை பறக்க விடுவோம்' என்ற அய்மன் அல் ஜவாகிரியின் கூற்று இலங்கைக்குப் பொருந்துவதாலும் இந்தியாவிற்கு ஏற்படுகின்ற  தாக்கம்  இலங்கையையும் பாதிக்கும் என்ற காரணத்தாலும் இலங்கையும் அல் கைதா அமைப்பை எதிர் கொள்ள தயார் என இலங்கை இராணுவப் பேச்சாளர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கூறி வருகின்றனர்.
    எது எவ்வாறு இருப்பினும் ஆதாரம் எதனையும் முன் வைக்காது 'இலங்கையில் இஸ்லாமிய ஜிகாத் உள்ளது.அதனை மத்ரசாக்கள் உருவாக்குகின்றன இஅதனை அரசு தடுக்க வேண்டும்' என உளறிக் கொண்டு திரிந்த பொது பல சேனா அமைப்பிற்கு அல்-கைதாவினது இவ் அறிக்கை தங்களது ஜிகாத் கூற்றை மக்களிடம் நிரூபிக்க சாதகமாக அமைந்துள்ளது.

    பேரின மக்களும் 'என்னடா?பொது பல சேனா அமைப்பு இவ்வளவு நாளும் நம்மட கத்தினது இதுகள வச்சித்தானாய்க்கும்டா,நாம கொஞ்சமாவது காது கொடுத்தமா?? ' என சிந்தனை கொண்டு பொது பல சேனா அமைப்பின் பக்கம் பேரின மக்கள் சாயவும், அதனுடைய ஏனைய இது தொடர்பான கருத்துக்கள் மக்களிடம் செல்வாக்குச் செலுத்தவும் இவ் அறிக்கை வித்திடும்.

    பொது பல சேனாவின் ஜிகாத் பற்றிய கூற்றுக்களில் அரசாங்கம் அதிக கரிசனை கொள்ள பேரினத்தைச் சேர்ந்த  பொது மக்கள், ஜாதிக கெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற இனவாதக் கட்சிகள், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இனவாத உறுப்பினர்களால் அரசாங்கம் மிகையாக உந்தப்படும் என்பதில் ஐயமில்லை.

    இதன் விளைவாக பொது பல சேனாவின் இது தொடர் பான விடயங்களை வைத்துப் பார்க்கும் போது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத், மத்ரசாக்கள் குறி வைக்கப் படலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

    அல்-கைதாவின் இவ் அறிக்கையைத் தொடர்ந்து பொது பல சேனா 'தாங்கள் படித்து படித்து சொன்னோமே!கேட்டிங்களா??' என்ற பாணியில் வீறு கொண்டு அறிக்கைகள் விட ஆரம்பித்துள்ளது மாத்திரமின்றி முஸ்லிம்களின் ஆதிக்கம் சற்று மிகைத்துள்ள, இஸ்லாமிய கற்கை நெறிகள் பல உள்ள ஒரே ஒரு பல்கலைக்கழகமான தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தினுள்ளும் இதனைப் பயன்படுத்தி உள் நுழைந்து  தங்களது குழப்பத்தை அரங்கேற்ற பார்வையை குற்றி இருப்பது மிக வேதனைக்குரிய விடயமாகும்.

    தற்போது பாக்கிஸ்தானிய அகதிகள் மீதான கடும் போக்கு குறி வைப்பின் பின்னணியும் அல் கைதாவின் அச்சுறுத்தலின் எதிரொலி என்றே கூற வேண்டும்.

    அண்மையில் கோத்தாபாய ராஜபக்ச கூட இலங்கையில் இஸ்லாமிய  தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாக கூறி இருந்தார்.இதனை பல முஸ்லிம் அரசியற் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் எதிர்த்திருந்தனர். இனி என்ன??அவர்கள் பாட்டுக்கு கதை புனைந்து  அறிக்கை விட்டாலும் எதுவும் பேச முடியாத நிலைக்கு இவ் அறிக்கை முஸ்லிம்களை கொண்டு சேர்த்துள்ளது.

    அளுத்கமை.தர்கா டவுன் கலவரம், தொடரும் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வுச் செயற்பாடுகள் இலங்கையில் அல்-கைதா அமைப்பின் தடம் பதித்தலுக்கு அதிக சாதகமாக அமையும்.எனவே, இலங்கை அரசானது இவற்றிக்கெல்லாம் அழகாகான தீர்வுத் திட்டங்களை முன் வைப்பதன் மூலமும், இவைகள் மூலம் முஸ்லிம்கள் அடைந்த வடுக்களுக்கு சிறந்த மருந்திடுவதன் மூலமும் அல் கைதாவின் தடம் பதித்தலுக்கு ஏதுவான காரணிகளை இல்லாது ஒழிக்காலம்.

    இவ் அறிக்கையைத் தொடர்ந்து பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் இதை வைத்தே பிரச்சாரங்கள் செய்து, மக்களை தங்களது வசம் இழுத்து  முன்பை விட முஸ்லிம்கள் மீது மிகக் கடும் போக்கு வாதத்தை திணிக்க தயாராகி வருவது போன்றே அதனுடைய தற்போதைய சில செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கிறது .இவ்வாறு மிகக் கடும் போக்கு வாதங்கள் மென் மேலும் முஸ்லிம்கள் மீது திணிக்கப் படுமாக இருந்தால் அல் கைதா அமைப்பின் தடம்பதித்தலுக்கு சிறந்த அடித்தளமாக அமையுமே தவிர முஸ்லிம்கள் மீதான அடக்கு முறை அல் கைதாவிற்கு ஒரு  போதும் தடையாக அமையாது என்பதே உண்மை.ஈராக் மீது அமேரிக்கா போர் தொடுத்ததே, நலிவடைந்து காணப்பட்ட அல் கைதாவிற்கு புத்துணர்வு வழங்கியது என பலரும் ஆரூடம் தெரிவித்து வருவதே இதற்கான அழகிய வரலாற்றுச் சான்றாக முன்வைக்கலாம்.

    அளுத்கமை, தர்கா டவுன் பிரச்சனைகள் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடுருவலுக்கு வித்திடும் என அறிந்த அரசு, மேல் மாகாண சபை உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் உட்பட பலரினது மேல் தனது சந்தேகப் பார்வையைக் குற்றி விசாரணைக்கு உட்படுத்தி இருந்தது.இப்போது இதனை தனக்கு சாதகமாய் பயன்படுத்தி தனது வெற்றி வாய்ப்புக்கள் நலிவடைந்து சென்று கொண்டிருக்கும் தற்காலத்தில்இதனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள அசாத் சாலி போன்ற முஸ்லிம்களுக்காக அரசுக்கெதிராக குரல் கொடுத்து அரசை நலிவடையச் செய்து கொண்டிருக்கும் சில அரசியல் முக்கிய புள்ளிகள் குறிவைக்கப்பட்டு விசாரணை, கைது போன்ற நடவடிக்கைகளால்  அடக்கும் வழி முறைகள் நாட்டில் அரங்கேரினாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அல்-கைதாவினது அறிக்கையும், இலங்கையும்...!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top