ரொபட் அன்டனி-
இப்போதுவரும்,
அப்போதுவரும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடயம்
அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்தவகையில் ஜனவரி மாதம் முதல்
வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதுடன் விரைவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் தினமும் அறிவிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட அறிவித்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கையொப்பத்துடன் தேர்தல் திணைக்களத்துக்கும் அரசாங்க அச்சக திணைக்களத்துக்கும் நேற்று முன்தினம் பகல் அனுப்பி வைக்கப்பட்டன.
அலரி மாளிகையில் நேற்று முன்தினம் பகல்
1.37 மணிக்கு ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது தொடர்பான
உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ
கைச்சாத்திட்டார்.பல்வேறு தடைகளை தாண்டியே ஜனாதிபதி இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார் என்று கூறலாம்.
அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி இரண்டாவது தடவைக்காக பதவியேற்று
நேற்று முன்தினத்துடன் 4 வருட பதவிக் காலம் முடிந்துள்ளதால் அடுத்த
ஜனாதிபதித் தேர்தலை நடத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு
ஜனாதிபதி விசேட அறிவித்தல் மூலம் கோரியுள்ளார்.
ஜனாதிபதி யினால் மூன்றாவது தடவையாக
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று
எதிர்க்கட்சிகளினாலும் முன்னாள் பிரதம நீதியரசரினாலும்
தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில் தன்னால் மூன்றாவது
தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது
தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இம்மாதம் 5
ஆம் திகதி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கைவிடுத்திருந்தார். இது
தொடர்பில் ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 10 பேர் கொண்ட குழு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் மூன்றாவது தடவையாகவும்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று ஆலோசனை
வழங்கியிருந்தது.
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி
தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவதற்கு எந்தத்
தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் 10 நீதியரசர்களும்
ஏகமனதாக தீர்மானித்து அறிவித்திருந்தனர். அந்த தீர்ப்பின்
பின்னரே ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளைஇ கடந்த புதன்கிழமை இரவு அலரி
மாளிகையில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்
குழுக்கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக் ஷ போட்டியிடுவார் என்று ஏகமனதாக
தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற யோசனையை
அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா முன்மொழிந்துள்ளார். அதனை அமைச்சர்
ஏ.எச்.எம்.பௌஸி மற்றும் சி.பி.ரத்நாயக்க ஆகியோர் வழி மொழிந்தனர்.
உடனடியாக அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஏகமனதான ஆதரவை மத்திய குழுக் கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த புதன்கிழமை நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது
மிகவும் பரபரப்பான சூழலிலேயே இடம்பெற்றுள்ளது. அமைச்சர்
மைத்திரிபாலவே இந்தக் கூட்டத்தின் பரபரப்பான நிலைமைக்கு
முக்கியமானவர். இந்நிலையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
முதலில் மத்திய குழுக் கூட்டத்துக்கு வர விருப்பம் இன்றி
இருந்ததாகவும் பின்னர் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவே அமைச்சர்
மைத்திரிபால சிறிசேனவை அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அந்தக் கூட்டத்தின்போது அமைச்சர் மைத்திரிபால
சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் அவர் அதற்கு
ஒன்றும் கூறவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.
ஆளும் கட்சியை பொறுத்தவரை ஆளும் ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பல பங்காளிக் கட்சிகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வுக்கான ஆதரவை உறுதிபடுத்தியுள்ளன.
குறிப்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக
இடதுசாரி முன்னணி, அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான
லங்கா சம சமாஜ கட்சி மற்றும் அமைச்சர் டியு. குணசேகர தலைமையிலான
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகள் தமது ஆதரவை
ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டன.
ஆரம்பத்தில் இந்தக் கட்சிகள் மூன்றும்
ஜனாதிபதி தேர்தல் தற்போதைக்கு நடத்தப்படவேண்டிய அவசியம் இல்லை
என்று கூறிவந்தன. எனினும் தற்போது ஜனாதிபதி தேர்தல்
உறுதியாகியுள்ள நிலையில் இந்தக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை
அறிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
மற்றும் பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய
சங்கம், பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஜனாதிபதிக்கான ஆதரவை
வெளிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தற்போது தேர்தல்
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சித் தாவல்கள் ஆரம்பமாகவும்
ஆரம்பித்துவிட்டன. பொதுவாகவே தேசிய மட்டத் தேர்தல் காலம் ஒன்றில்
இரண்டு பக்கங்களிலும் கட்சித் தாவல்கள் இடம்பெறுவது வழமையாகும்.
அவ்வாறு தற்போது முதலாவது கட்சித் தாவல் இடம்பெற்றுள்ளது. ஆளும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் வசந்த சேனாநாயக்க நேற்றுமுன்தினம் ஐக்கிய தேசிய கட்சியில்
இணைந்துகொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி பிதாக்களான டி.எஸ்.
சேனாநாயக்க பரம்பரையில் வந்த வசந்த சேனாநாயக்க ஆளும் கூட்டணியில்
இருந்து தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
முறைமை நீக்கப்படவேண்டும் என்று நாம் தொடர்ந்து
வலியுறுத்திவந்தோம். இதனை பல முறை எடுத்துக்கூறினோம். ஆனால்
செவிமடுக்கவில்லை. எனவே தாய்நாட்டை பாதுகாப்பதற்காக ஐக்கிய
தேசியக் கட்சியுடன் நம்பிக்கையுடன் இணைந்துகொள்கின்றேன் என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார். .
இந்த நிலையில் எதிரணியின் பொதுவேட்பாளராக
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால
சிறிசேன தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
அரசாங்க தரப்பிலிருந்து அமைச்சர்
மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான ராஜீதசேனாரத்ன, துமிந்த திசாநாயக்க
பிரதியமைச்சர் எம்.கே.டி.எல்.குணவர்த்தன, எம்.பிக்களான ரஜீவ விஜயசிங்க
ஆகியோரும் எதிரணியின் பக்கம் வந்துள்ளனர்.
ஆளும்தரப்பிலிருந்து இன்னும் பலர் இந்த அணியினருடன் இணைந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஜாதிக ஹெல உறுமய தற்போது
அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டது.
அந்தவகையில் ஹெல உறுமயவில் இருந்து இரண்டு பாராளுமன்ற
உறுப்பினர்கள் வெளியேறியுள்ளனர்.
இது அரசாங்கத்தை சிந்திக்க
வைத்திருக்கும். அதேபோன்று எதிர்க்கட்சியில் உள்ள சிலரையும்
அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதற்கு பாரிய முயற்சிகள்
இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித்
தேர்தலில் இரண்டு முக்கிய சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடுகள்
எவ்வாறு அமையும் என்பது இன்னும் வெளிச்சத்துக்கு வராத ஒரு விடயமாக
இருந்துவருகின்றது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் நிலைப்பாடு இதுவரை அறிவிக்கப்படவில்லை. முஸ்லிம்
காங்கிரஸ் ஏன் இத்தனை காலம் மௌனமாக இருக்கின்றது என்று தெரியவில்லை.
அதற்காக உறுதியான காரணங்களும் கூறப்படுவதாக இல்லை. அரசாங்கத்தை
விட்டு விலகி எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தலைலமை எண்ணினாலும் அதற்கு கட்சிக்குள் இருக்கின்ற சில
உறுப்பினர்கள் எவ்வாறு தமது பிரதிபலிப்பை காட்டுவார்கள் என்று
தலைமை சிந்தித்துக்கொண்டிருக்கலாம். இந்தத் தேர்தலினால் கட்சி
மீண்டும் ஒருமுறை சிதறிவிடக்கூடாது என்பதில் தலைமை உறுதியாக
இருக்கலாம்.
மறுபுறம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடிவு செய்தால் மக்கள் அதனை
ஏற்பார்களா என்ற சந்தேகமும் குழப்பமும் முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தலைமைக்கு இருக்கலாம். எனவே, இந்தத் தேர்தலில் முடிவு ஒன்றை
எடுப்பது அக்கட்சியின் தலைமைக்கு ஒரு சவாலான விடயமாகவே அமையும்.
எவ்வாறான முடிவாக இருந்தாலும் அது சமூகத்தின் நலன்சார்ந்ததாக
இருக்கவேண்டும் என்பதனை மறந்துவிடக்கூடாது.
இது இவ்வாறிருக்க ஜனாதிபதித் தேர்தலில்
என்ன செய்யப்போகின்றது என்று அனைவரும் கேள்விக்குறியுடன்
பார்த்துக்கொண்டிருக்கும் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை இம்முறை தேர்தலில் கடந்த
முறை போன்று அவசரப்பட்டு எவ்விதமான முடிவையும் எடுக்காத நிலையே
காணப்படுகின்றது.
காரணம் கடந்த முறை எதிரணிக்கு ஆதரவு
வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்ததும் அதனை ஆளும்
தரப்பு தனது பிரசாரத்துக்கு நன்மை பயக்கும் வகையில்
பயன்படுத்தியது. சரத் பொன்சேகாவும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினரும் உடன்படிக்கை செய்துகொண்டனர் என்று ஆளும் கட்சி
சார்பில் பிரசாரம் செய்யப்பட்டது. இது எதிரணிக்கு பாரிய பின்னடைவை
கொண்டு வந்தது என்று கூறலாம்.
இந்நிலையில் இம்முறை ஜனாதிபதித்
தேர்தலில் அவ்வாறு எந்தவொரு விடயத்தையும் செய்து விடாமல்
இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை
தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது. இதற்கு சிறந்த
உதாரணமாக ஒரு விடயத்தை குறிப்பிடலாம். அதாவது எதிர்வரும்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்
ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை
பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் தனது நேர்மையை
வெளிக்காட்டுவதற்காக கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார அபிவிருத்தி
அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான
பஷில் ராஜபக் ஷ தெரிவித்திருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எந்த
வழியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு எந்தவொரு உதவியையும்
செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ இராஜதந்திர ரீதியாகவோ கூட்டமைப்பு
ஜனாதிபதிக்கு இதுவரை உதவியதில்லை. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு
சந்தர்ப்பமாக பயன்படுத்தி கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குமென்று
நம்புகின்றோம் என அவர் கூறியிருந்தார். அமைச்சர் பஷில் ராஜபக் ஷவின்
கோரிக்கைக்கு பதிலளித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.
சம்பந்தன் அமைச்சரின் கூற்றை நிராகரிக்கவில்லை என்றும் ஆழமாக அது குறித்து
ஆராய்வதாகவும் கூறியிருந்தார். சம்பந்தன் இவ்வாறு கூறியிருந்ததன் மூலம்
இம்முறை தேர்தல் விடயத்தில் மௌனமான நிதானமான போக்கை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு பேணுகின்றது என்ற விடயம் தெளிவாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் காலம்
ஆரம்பிக்கப்பட்டுள்ள மையினால் பரபரப்பான அறிவிப்புக்கள் உள்ளிட்ட பல
விடயங்களை எதிர்பார்க்கலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட
சிறுபான்மை கட்சிகள் மிகவும் சிந்தித்து செயற்படவேண்டியது அவசியமாகும்.
Virakesari

0 comments:
Post a Comment