![]() |
File |
கொழும்பில்
ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு இன்னமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மகிந்த ராஜபக்ச அறிவித்த
வேளை எதுவுமே பரபரப்பற்று தான் இருந்தது. தான் தான் அடுத்த சனாதிபதி என்று
அவர் கற்பனையில் இருந்தார்.
தன்னை எவராலும் வீழ்த்த முடியாது என்ற
இறுமாப்பில் இருந்தார். ஆனால் முன்கூட்டிய மேற்குலகின் நிகழ்ச்சியின்
வடிவம் திடீரென மைத்திரிபால சிறிசேன தான் மகிந்தரை எதிர்த்து ஜனாதிபதி
தேர்தலில் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்ட வேளை தான் உண்மையில்
கொழும்பு பரபரப்படைந்தது.
அதுவரைக்கும் தமிழர் தரப்பாகட்டும், முஸ்லிம்தரப்பாகட்டும் ஏன்
சிங்களத்தரப்பாகட்டும் தேர்தல் நடந்தால் என்ன நடக்காட்டால் தான் என்ன என்று
சலிப்பில் இருந்தார்கள். ஆனால் கிணறு வெட்டப்போய் பூதம் வெளிவந்த கதையாக
தன்னுடைய அமைச்சரவையில் இருந்தே ஒருவர் தன்னை எதிர்த்து நிக்கின்றார்
என்றதும் மகிந்தரின் கன்னம் சற்று மின்னத்தொடங்கியது.
கொழும்பில் கட்சித் தாவல்களுக்கு குறைவேயில்லை. இங்கிருப்பவர்கள்
அங்குமாக அங்கிருப்பவர்கள் இங்குமாக தாவத் தொடங்கினர். மக்களே குழம்பினர்
எந்தக்கட்சியில் எவர் இருக்கின்றார் என்று. அந்தளவிற்கு பரப்பை சந்தித்தது
தேர்தல் களம்.
வெற்றியும் மைத்திரியை சேர, மகிந்தர் நடையைக்கட்ட வேண்டியதாயிற்று.
அம்பாந்தோட்டைக்கு நடையைக்கட்டியவருக்கு பதவிப் பசி அடங்கவில்லை. மீண்டும்
தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் குறியாக
இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள், பௌத்த
விகாரைகள் என்று மெதுமெதுவாகவே வெளிவரத் தொடங்கினார்.
இந்நிலையில் மகிந்தருக்கான ஆதரவு கொஞ்சம் பெருகுவதை மறுக்கமுடியாது.
சிங்கள கடும்போக்காளர்கள் பலர் இப்பொழுதும் மகிந்த ராஜபக்சவை தலைவராகவும்,
தேசிய வீரராகவும், கதாநாயகனாகவும் பார்க்கின்றார்கள். அவர்கள் ரணில் அரசை
விரும்பவில்லை.
சுதந்திரக்கட்சிக்குள்ளும் மகிந்தருக்கான ஆதரவுகள்
அதிகரித்துக்கொண்டிருக்கவே முன்னாள் ஜனாதிபதிக்கு கொஞ்சம் ஆறுதல்
பெருமூச்சு தென்பட்டது.
இதுவொருபுறமிருக்க, நடக்கவிருக்கும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி
பெரும்பான்மை பலத்தினை பெறும் என்று சில கருத்துக்கணிப்புக்கள்
தெரிவிக்கின்றன. ஏற்கனவே சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவடைந்து மைத்திரி
தலைமையில் ஓரணி, மகிந்த தலைமையில் இன்னொரு அணியென்று இருக்கையில் மற்றொரு
புறத்தில் சந்திரிக்காவை நேசிக்கும் தரப்பினர் என தென்னிலங்கையின் பிரதான
கட்சிகளில் முக்கியமான கட்சியான சுதந்திரக்கட்சியின் வாக்குகள்
சிதறப்போகின்றதை உணரமுடிகின்றது.
அண்மையில் கொழும்பில் மந்திர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த மைத்திரிபால
சிறிசேன உடனடியாக மகிந்த ராஜபக்சவை சந்தித்தாகவேண்டும் என்ற முடிவை
எடுத்ததாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய ஜனாதிபதியாக இருக்கும் மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை இத்
தேர்தலில் வங்குரோந்து நிலைக்கு இட்டுச்சென்றால் அல்லது இத்தேர்தலில்
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆசனங்களை குறைவாகப்பெற்றுக்கொண்டால் இதுவே
சுதந்திரக்கட்சியின் அழிவிற்கான முதல்ப்படி என்ற வாதமும் மேல் எழும்.
எனவே இவற்றை உடனடியாக நிவர்த்தி செய்தாக வேண்டிய சூழலில் இருந்த
ஜனாதிபதி வேறு வழியின்றி மகிந்தரை சந்தித்து இதுபற்றி பேசவேண்டிய சூழல்
தோன்றிற்று.
இவற்றில் சில விட்டுக்கொடுப்புக்கள் நிகழ்ந்ததாக தகவல்கள்
வெளிவந்திருந்தாலும் அவை என்ன என்பது தொடர்பான முழுமையான செய்திகள்
இன்னமும் வெளிவரவில்லை.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இந்நாள் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்தமையானது தற்பொழுதைய அரசியல் சூழ்நிலையில்
மிகப்பெரும் பேசு பொருளாகியுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அதிருப்தி கொண்டிருக்கின்றார்.
மகிந்தரை கண்டாலே எரிந்து விழும் சந்திரிக்கா மைத்திரியின்
இச்செயற்பாட்டில் விருப்பம் இல்லாதவர் போல இருப்பதாக
தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் இதில் இருக்கின்ற இரண்டு பிரதான தலைவர்களுக்கும் முக்கிய
பிரச்சினை. மகிந்தர் எப்படியாவது தான் அல்லது கோத்தபாய மீண்டும்
அரசியலுக்குள் உள்நுழைய வேண்டும். மைத்திரியின் கவலை சுதந்திரக்கட்சியின்
வாக்குகள் சிதறக்கூடாது என்பது. ஆனால் மைத்திரியால் ரணிலையும்
விட்டுக்கொடுக்க முடியாது.
இப்பொழுது ஒன்று மட்டும் தெளிவாக புரிகின்றது மைத்திரி மேற்குலகின்
இசைக்கு ஏற்ப ஆடினாலும் அவரின் பதட்டங்கள் எல்லாம் எங்கே கட்சியின் வரலாறு
சிதைந்துவிடுமே என்று. ஆனாலும் வேறு வழியில்லை. கட்சியின் வாக்கு வங்கியை
காப்பாற்ற மைத்திரிக்கு மகிந்தரின் ஆதரவு தேவை, தேர்தலில் களமிறங்க
மகிந்தருக்கு மைத்திரியின் ஆதரவு ஓரளவுக்கு வேண்டும். ஆகவே இரகசிய
சந்திப்புக்கள் மிகவும் ஆபத்தானவை.
இந்த தேர்தல் பல்வேறு கதவுகளை திறக்கவிருக்கின்றது. யார் யார் எந்தப்
பக்கம் தாவப்போகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் கடும்போக்கு சிங்கள
இனவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்நுழைவார்கள் என்பதில் ஐயமில்லை.
0 comments:
Post a Comment