• Latest News

    November 17, 2015

    கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் நிறைய குறைபாடுகள் உண்டு: கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

    கிழக்கு மக்களின் நல்வாழ்வே எங்கள் ஒரே நோக்கம் அதனை மையமாகக் கொண்டே கிழக்கு மாகாண சபை பணியாற்றுகிறதென்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

    பதியத்தளாவை பிரதேச சபைக்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்ற அவர் கிழக்கு மாகாண சபையின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். எமது மாகாண சபையில் கடந்த காலங்களைப் போன்று அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடும் உறுப்பினர்கள் இல்லை. தமிழ் , சிங்கள, முஸ்லிம், என்ற பேதங்களையும் கட்சி வேறுபாடுகளையும் மறந்து நாம் பணியாற்றுகின்றோம்.

    அமைச்சரவையில் மூவினங்களைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இன்னும்   சொல்லப்போனால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற நிலையின்றி அபிவிருத்தியையும் மக்களையும் கருத்தில்  கொண்டு நாம் பணியாற்றுகின்றோம். தேசிய அரசாங்கத்தின் முன்னோடிகள் நாங்கள் என்று பெருமையாக கூறுகின்றோம். ஏறத்தாழ மூன்று இனங்களும் சமனாக கொண்ட ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 
     
    அத்துடன் இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் ஒரு மாவட்டமாக இது விளங்குகின்றது . நாம் ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் மக்கள் விமோசனத்துக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கினோம். அதன் பலன்களை இன்று மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் நிறைய குறைபாடுகள் உண்டு. அவைகளை படிப்படியாக நிவர்த்திப்பதற்காக ஜனாதிபதியுடனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளேன். நாம் ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ள வேண்டும். 
     
    மத்திய அரசாங்கம் நமக்கு எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு நம்மிடம் தொடர்ந்து இருக்கக் கூடாது . நமது சபைகளின் அதிகாரத்தின் கீழ் உள்ள வளங்களையும் நிறுவனங்களையும் பயன்படுத்தி நாம் வருமானம் ஈட்டவேண்டும். அதன் மூலம் நமது பிரதேசத்தின் தேவைகளை தீர்த்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நான் எடுக்கும் சில செயற்பாடுகள் உள்ளூராட்சி சபைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியுமென நம்புகிறேன் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் நிறைய குறைபாடுகள் உண்டு: கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top