- எஸ்.அஷ்ரப்கான் -
வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் எதிர்க்க கூடாது என்றும் குறைந்த பட்சம் கிழக்கிலுள்ள தமிழ்ப்பகுதிகளை வடக்குடன் இணையக்கூடாதென முஸ்லிம்கள் சொல்ல முடியாது என சுரேஷ் பிரேமசந்திரன் கூறியிருப்பதன் மூலம் இது விடயத்தில் முஸ்லிம் கட்சிகளின் சரியான நிலைப்பாடு பற்றி அவர் அறியாமையில் இருக்கிறார் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
இது விடயமாக அவர் இன்று (17) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடக்கு கிழக்கை இணக்க கூடாதென அமைச்சர் ஹக்கீம், ஹரீஸ் போன்றோர் தீவிரமாக நிற்கின்றனர் என சுரேஷ் பிரேமசந்திரன் கூறுவதிலிருந்தே அவர் இது விடயத்தில் தெளிவற்றிருக்கிறார் என தெரிகிறது.
ஹரீசை பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் அமைச்சர் ஹக்கீமை பொறுத்த வரை வடக்கும் கிழக்கும் இணையக்கூடாது என அவர் இன்று வரை பகிரங்கமாக கூறவில்லை.
இணைப்பு விடயத்தில் கழுவுற நீரில் நழுவுற மீனாகவே ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரசும் உள்ளது.
அது மட்டுமல்லாமல் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் உலமா கட்சி மட்டுமே தெளிவான தீர்வுத்திட்டத்தை கடந்த காலங்களில் முன் வைத்து வந்துள்ளதையும் சுரேஷ் பிரேமசந்திரன் போன்றோர் தெரிந்து கொள்ள வேண்டும். எம்மை பொறுத்த வரை வடக்கும் கிழக்கும் எக்காரணத்தை கொண்டும் மீண்டும் இணைக்கப்படக்கூடாது. இணைந்த வடக்கு கிழக்கில் தனி அலகு என்பதெல்லாம் அர்த்தமற்ற, முஸ்லிம்களை ஏமாற்றும் தந்திர வார்த்தைகளாகும். அதே வேளை கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்கள், காணிகளை வடக்குடன் இணைக்க கிழக்கு தமிழ் மக்கள் விரும்பினால் அவற்றை மட்டும் தாராளமாக வடக்குடன் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் முஸ்லிம்களின் பிரதேசங்கள், வர்த்தக நிலையங்கள், காணிகள் என்பன தனி கிழக்கு மாகாணமாகவே இருக்கும் என்பதே உலமா கட்சியின் தீர்வுத்திட்டமாகும். இதனை பாராளுமன்ற ஆலோசனை குழுவுக்கும் நாம் அனுப்பியுள்ளோம்.
சுரேஷ் பிரேமசந்திரன் போன்ற தமிழ் கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பணத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட கட்சிகளின் கருத்துக்களை மட்டும் ஆராய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
ஆகவே வடக்கு கிழக்கை இணைப்பது பற்றி தமிழ் கட்சிகள் இனியும் பேசி தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் கசப்புணர்வை மேலும் மேலும் வளர்க்காது சுரேஷ் பிரேமசந்திரன் சொல்வது போல் கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களையும், காணிகளையும் மட்டும் அவர்களின் விருப்பத்தை பெற்று வடக்குடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதே சரியானதாகும் என்பதை முஸ்லிம் உலமா கட்சி சொல்லி வைக்கிறது.

0 comments:
Post a Comment