• Latest News

    January 16, 2018

    சிறுபான்மை சமூகம் தன்னுடைய மனக்கிடக்கையை வெளிப்படுத்துவதற்கு உகந்த தேர்தல்” - வேட்பாளர் ஹிஷாம் தெரிவிப்பு

    - ஊடகப்பிரிவு - 

    ண்மைக் காலங்களில் எமது சமூகத்தை கறிவேப்பிலையாகவே பயன்படுத்துகின்றனர். தேவை ஏற்படின், தேர்தல் காலங்களில் எமது பிரதேசத்துக்கு வந்து எமது வாக்குகளை அள்ளிக்கொண்டு செல்வார்கள். எமக்கு ஒரு பிரச்சினையென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் களுத்துறை நகரசபைக்கு போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தெரிவித்தார்.
    களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை தெற்கு பள்ளிவீதியில்  இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 

    வேட்பாளர் ஹிஷாம் தொடர்ந்து உரையாற்றுகையில், 
    கடந்த நான்கு ஆண்டுகளாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து அவரது அமைச்சில் பணி புரிகின்றேன். அமைச்சரின் வழிகாட்டலில், ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான கல்வி அபிவிருத்தித் திட்டங்கள், சமூகப்பணிகள், கட்டுமானப்பணிகள் போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு நாம் செயற்திட்டங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளோம். அந்தவகையில், எமது ஊரையும் நாம் திரும்பிப் பார்க்க வேண்டாமா? மற்ற பிரதேசங்களுக்கு கிடைக்கும் சேவைகளில் ஒரு பத்து வீதமாவாது எமது ஊருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேதான் நாம் இந்த முடிவுக்கு வந்தோம்.  

    அமைச்சரிடத்தில் நாம் இதுதொடப்பில் பேசியபோது, உடனே அமைச்சர் “தன்னம்பிக்கையும், தைரியமும், சமூக உணர்வும் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் துணிச்சலுடன் களமிறங்குங்கள், இறைவன் உங்களுக்கு உதவி செய்வான். நானும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார். அமைச்சரின் அந்த உற்சாகமான வார்த்தைகள் தான் இன்று களுத்துறையில் எமது கட்சி களமிறங்கக் காரணமாகும். 

    நாம் அரசியலுக்கு வந்ததைப் பற்றி பலர்  தற்போது விமர்சித்துவருகின்றனர். எமது கட்சியின் வருகையினால் முஸ்லிம்களின் வாக்குகள் உடையப்போகிறது என்றும், முஸ்லிம் தலைமைத்துவம் இல்லாமலாகி, துவேசம் உருவாகும் என்றும் கதை கூறுகிறார்கள்.
    இந்தத் தேர்தல் முறையை பொறுத்தவரையில், ஒரு கட்சி ஆட்சியமைக்க வேண்டுமாக இருந்தால், 51 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டாரங்களில் வெற்றிகொள்ள வேண்டும். ஏற்கனவே எமது நகரசபையில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். மக்கள் காங்கிரஸ் இங்கு களமிறக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை, ஐந்து அல்லது ஆறாக அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. இந்தத் தேர்தல் முறையை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், எமது கட்சி போன்றதொரு கட்சிக்கு நீங்கள் எந்தப் பிரதேசத்தில் வாக்களித்தாலும், அத்தனை வாக்குகளையும் ஒன்று சேர்த்து இந்த நகரசபையை  தீர்மாணிக்கும் சக்தியாக, எமது முஸ்லிம் சமூகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான பலம்தான் எமது கட்சி.
    இந்தப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், எமக்கு ஒரு பிரச்சினை என்றால் கேட்பதற்கு நாதியில்லை. வாக்குகளுக்காக மட்டுமே எமது சமூகத்தைப் பயன்படுத்துகின்றனர். எமது கடைகள் உடைக்கப்படும்போது, நீதி கேட்டால் அதற்கு பதில் இல்லை. இவ்வாறானதொரு நிலையில் களுத்துறையில் அரசியல் செய்வது பற்றி நினைத்தும் பார்க்காத அமைச்சர் ரிஷாட், தர்கா நகர், கிந்தோட்டை வன்முறைச் சம்பவங்களின் போது ஓடி வந்த அமைச்சர், எமது கட்சியை களுத்துறையில் களமிறக்குவதன் மூலம் ஒரு சமூகத்துக்கு பிரச்சினை வருமாக இருந்தால், பாதிப்பு ஏற்படுமாக இருந்தால்,  இவ்வாறனதொரு அநியாயத்தை களுத்தறை மக்களுக்கு ஒருபோதும் அவர் செய்யமாட்டார்.

    இந்த நகரசபையை தீர்மானிக்கும் சக்தி  முஸ்லிம்களாகிய நாங்கள்தான் என்ற பாடத்தை பெரும்பான்மை சமூகத்துக்குப் புகட்ட எமது கட்சியினால் மாத்திரம்தான் முடியும். அந்தவகையில் சமூக அக்கறை உள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து பணியாற்றுவதே எமது நோக்கம் 
    இந்தத் தேர்தலானது ஒரு ஜனநயாக நாட்டில் சிறுபான்மை சமூகம் தன்னுடைய அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு மிகவும் தகுதியான ஒரு தேர்தலாகும். அதனால்தான் “வேட்டுக்களின் சக்தியை விட வோட்டுக்கள் சக்தி வாய்ந்தது” என்று கூறப்படுகின்றது. வாக்குகள் என்பது உங்கள் மீதுள்ள அமானிதம். எனவே சிந்தித்துச் செயலாற்றுங்கள்.  

    மக்கள் காங்கிரஸை நாம் இந்தத் தொகுதியில் களமிறக்கியதன் நோக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமூகத்தின் மீது கொண்ட பற்றும் அக்கறையுமே ஆகும் என்றார்.


            

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுபான்மை சமூகம் தன்னுடைய மனக்கிடக்கையை வெளிப்படுத்துவதற்கு உகந்த தேர்தல்” - வேட்பாளர் ஹிஷாம் தெரிவிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top