• Latest News

    April 28, 2019

    மீள முடியாத துயரம்

    சஹாப்தீன் -
    கடந்த 21ஆம் திகதி கிறிஸ்தவர்களினால் கொண்டாடப்படும் உயிர்ப்பு புனித நாளாகும். உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் உயிர்ப்பு ஞாயிறும் ஒன்றாகும். மக்களுக்காக உயிர் விட்ட இயேசுவின் உயிர்த்தெழுதலை கொண்டாடி பிராத்தனைகளில் ஈடுபடுவார்கள். கிறிஸ்தவர்களின் இப்புனித தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியர் ஆலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றின் மீதும்,  கொழும்பு சங்கரில்லா ஹோட்டல், கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு சினமென் கிறேன்ட் ஹோட்டல்,  தெஹிவலை மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றின் மீதும் ஐ.எஸ் அமைப்பினர் தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இத்தாக்குதல்களில் இப்பத்தி எழுதும் வரைக்கும் 253 பேர் உயிர் இழந்துள்ளார்கள். சுமார் 500இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

    இத்தாக்குதல்களில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களில் ஒரு சிலர் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று அவர்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதனால், இலங்கை முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்கள் முன்னிலையில் குற்றவாளிகள் போன்று தலை குனிந்து நிற்க வேண்டியதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இத்தாக்குதல்கள் குறித்து; முஸ்லிம்கள் பெரும் கவலையடைந்துள்ளார்கள். தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கும் முஸ்லிம்களினால் அனுதாபத்தை மாத்திரமே கூற முடியும். ஆனால், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களின் இழப்பை எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது. அவர்களுக்கு மீள முடியாத துயரமாகும். முனித உயிர்களை காவு கொண்டு தாக்குதல்கள் நடைபெற்ற இந்நாள் இலங்கையின் வரலாற்றில் கருப்பு நாளாகவே இடம் பிடித்துள்ளது.

    பயங்கரவாத தாக்குதல்களின் கொடுமையையும், விளைவையும் இலங்கை மக்கள் நேரடியாக அனுபவித்துள்ளார்கள். முஸ்லிம்கள் புலிகளுக்கும், இராணுவத்திற்குமிடையே நடைபெற்ற யுத்தத்தின் போது பல துன்பங்களை அனுபவித்தார்கள். அதனை விடவும் மோசமான துன்பத்தை யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதல்களினால் இவற்றை விடவும் மோசமான நிலைக்குள் மாட்டிக் கொண்டுள்ளார்கள் என்றே கூறுதல் வேண்டும். முழு முஸ்லிம்களையும் மாற்று இனத்தவர்கள் சந்தேகங் கொள்ளும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்களினால் பாதிக்கப்படுகின்றவர்கள் சந்தேகங் கொள்வதனை தவிர்க்கவே முடியாது. அதே வேளை, அதற்காக முஸ்லிம்களினால் கோபப்படவும் முடியாது. 

    பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களின் மீதும், பள்ளிவாசல்களின் மீதும், வர்த்தக நிலையங்களின் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு, முஸ்லிம்களை ஆத்திரப்படுத்தி இன ரீதியானதொரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள். முஸ்லிம்கள் உயிர் இழப்புக்களையும், சொத்து இழப்புக்களையும் சந்தித்த போதிலும், கோபங் கொள்ளாது பொறுமையாக இருந்தார்கள். இதனால், பௌத்த இனவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. அதே வேளை, முஸ்லிம்கள் அடிப்படைவாத சர்வதேச பயங்கவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளார்கள் என்று பௌத்த இனவாத அமைப்புக்கள் தெரிவித்தன. இக்கருத்தை இலங்கையின் புலனாய்வுப் பிரிவும், இராணுவமும், முஸ்லிம்களும் மறுத்தார்கள். ஆனால், இன்று முஸ்லிம்களில் ஒரு சிலருக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்புகள் உள்ளதென்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், முஸ்லிம்களின் மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் மௌனித்துப் போயுள்ளார்கள். ஆயினும், முஸ்லிம்களில் ஒரு குழுவினர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் ஏனைய சமூகத்தவர்கள் குற்றவாளிகளாக பார்க்க முடியாது. இன்று முஸ்லிம்கள் இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை கேட்டுள்ளார்கள். அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையும், ஏனைய முஸ்லிம் அமைப்புக்களும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், அதற்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு, அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார்கள்.

    இதே வேளை, இத்தாக்குதல்களின் மூலமாக ஒரு சிலர் அரசியல் இலாபம் தேடிக் கொள்ளவும், முஸ்லிம் அரசியல் தலைவர்களை பயங்கரவாதிகள் போன்று காட்டுவதற்கும் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் முஸ்லிம் அமைச்சர்கள் இத்தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு சிலரோடு எடுத்துக் கொண்ட போட்டோக்களை வைத்துக் கொண்டு மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் உதவி புரிந்திருந்தால் அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கள் முஸ்லிம்களிடையே கிடையாது. ஆனால், ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதனை தவிர்க்க வேண்டும். 

    முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினரை ஐ.எஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்குள் சிக்க வைத்துள்ளது. இதனால், முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது.  பொதுவாக சர்வதேச ரீதியாக ஆயுதத் தாக்குதல்களில ஈடுபட்டு வருகின்ற பயங்கரவாத ஆயுதக் குழுக்கள் எல்லாம் மேற்குலக ஆதிக்க நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்டவை. ஐ.எஸ் அமைப்பு கூட அமெரிக்காவினதும், இஸ்ரேலினதம் தேவைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பென்றும், அதற்கு இஸ்லாமிய சாயம் பூசி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என இஸ்லாமிய அறிஞர்களும், முஸ்லிம் நாடுகளும் ஏகொபித்த கருத்தாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தில் எந்தவொரு உயிரையும் அநியாயமாக கொல்வதற்க அனுமதியில்லை. ஒரு உயிரைக் கொன்றால் முழு மனித சமூதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்றே இஸ்லாம் கூறுகின்றது. மேலும், ஐ.எஸ் பயங்கரவாதிகள் உடலில் பச்சை குத்தியுள்ளார்கள். முஸ்லிம்கள் உடலில் பச்சை குத்துவதில்லை. இஸ்லாம் அதனை தடை செய்துள்ளது. 

    நியூஸிலாந்தில் பயங்கரவாதி ஒருவர் பள்ளிவாசலில் மேற்கொண்ட துப்பாக்கி தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலுக்கு பலி தீர்க்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார். ஆயினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியுஸிலாந்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னதாகவே இத்தாக்குதல் திட்டமிடப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளார். நியூஸிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் உலக அளவில் முஸ்லிம்களின் மீது அனுதாபங்கள் ஏற்பட்டன. அதனை இலங்கையில் மேற்கொண்ட தாக்குதல்கள் தலை கீழாக்கியுள்ளன. முஸ்லிம்களின் மீது ஏற்பட்ட அனுதாப அலையை பொறுத்துக் கொள்ளாததொரு சக்தி இதன் பின்னணில் இருக்க வேண்டும். 

    இதே வேளை, இந்த தாக்குதல்களை இலங்கையில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஐ.எஸ் அமைப்போடு இணைந்து மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஸஹ்ரான் என்பவரே இதனை தலைமை ஏற்று நடத்தியுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதே வேளை, தேசிய தௌஹீத் ஜமாஅத் ஸஹ்ரான் என்பவரை 2017ஆம் ஆண்டு தமது அமைப்பிலிருந்து நீக்கிவிட்டதாகவும், ஸஹ்ரானுக்கும் அமைப்புக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று தேசிய தௌஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.

    இத்தாக்குதல்களை மேற்கொண்டது தாங்கள்தான் என்று தாக்குதல்கள் நடைபெற்று மூன்று நாட்களின் பின்னர் ஐ.எஸ் உரிமை கோரி இருந்தாலும், இலங்கையில் எந்த நோக்கத்திற்காக தாக்குதல்களை மேற்கொண்டோம் என்று ஐ.எஸ் அமைப்பு இன்னும் தெரிவிக்கவில்லை. கிறிஸ்தவர்களையும், உல்லாச ஹோட்டல்களையும்  அதாவது வெளிநாட்டவர்களையும் குறி வைத்து தாக்கியுள்ளமையால் இலங்கையின் பொருளாதரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இதே வேளை, இத்தாக்குதல்களை காரணமாக வைத்து அமெரிக்கா இலங்கையில் காலூன்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக இருக்கின்றது. இலங்கையின் மன்னார் கடல் பிராந்தியத்தில் எரிவாயு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ் அதிக செலவுகளை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இந்த எரிவாயு அகழ்வு நடவடிக்கைகளை தமதாக்கிக் கொள்ள வேண்டுமென்பதில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் அதிக நாட்டங்கள் இருக்கின்றன. இதனால், இந்நாடுகளிடையே போட்டியும் காணப்படுகின்றன. ஆதலால், இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களை சாட்டாக வைத்து, ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இராணுவ ரீதியாகவும், புலனாய்வு ரீதியாகவும் இலங்கைக்கு உதவுதல் என்று அமெரிக்கா இலங்கையில் நிலை கொள்ளவும் வாய்ப்புக்கள் உள்ளன. மத்திய கிழக்கு அரபு நாடுகளில் எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னரே அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்டவை எண்ணெய் வளத்தை உறுஞ்சுவதற்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. பின்னர் அரபு நாடுகளிடையே காணப்பட்ட ஒற்றுமையை குழைத்து, அந்நாடுகளிடையே பகையையும் உருவாக்கியது. இப்போது அந்நாடுகளின் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தையும் நிலை நிறுத்தி வைத்துக் கொண்டு அரபு நாடுகளை பொம்மை போன்று ஆட்டி வைத்துக் கொண்டிருக்கின்றன. இதில், அமெரிக்காதான் முன்னிலையில் இருக்கின்றது. அணு ஆயுதம் இருக்கின்றதென்று ஈராக் மீதும், மக்களை காப்பாற்ற வேண்டுமென்று லிபியா மீதும் அமெரிக்காவின் தலைமையில் மேற்கொண்ட தாக்துல்கள் அங்குள்ள எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்காகவே என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆதலால், இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டள்ள எரிவாயு வளத்தை சுரண்டுவதற்கு அமெரிக்கா சூழ்ச்சிகளை செய்யுமென்று கருத இடமுண்டு. 

    இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் ஏற்றுக் கொண்ட பல விடயங்களை நிறைவேற்றவில்லை. அதிலும் மனித உரிமை மீறல், காணாமல் போனவர்கள் விடயம், இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றதாக கூறப்படும் மனிதப்படு கொலை, அரசியல் தீர்வு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இவற்றை நிறைவேற்ற வேண்டுமென்ற எந்தவொரு எண்ணமும் அரசாங்கத்திற்கு கிடையாது. தமிழர் தரப்பினரை மாயாஜால வார்த்தைகளின் மூலமாக ஏமாற்றி காலத்தை கடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மேற்படி விடயங்களை நிறைவேற்றினால் தென்னிழங்கையில் தங்களின் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் சிறுபான்மையினரை குறிப்பாக தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலை தாக்குதல்களும், ஏற்பட்ட மனித அழிவுகளும் ஐ.நாவின் அனுமதியுடன் இன்னும் காலத்தை நீடித்துக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு வழி ஏற்படலாம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம் நிலை கொண்டிருப்பதனை மீளப் பெற்றுக் கொள்ள முடியாதென்ற நிலைப்பாட்டையும், மீண்டும் சோதனைச் சாவடிகளையும், சுற்று வளைப்புக்களையும் மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு காலமைத்துள்ளது.  அரசாங்கத்தினால் மீளவும் அவசர காலச் சட்;டம்; கொண்டு வரப்பட்டுள்ளது. நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதம் ஊடுறுவியுள்ளமையை காட்டி அவசர காலச் சட்டம் இன்னும் நீடிக்கப்படவே வாய்ப்புக்கள் உள்ளன. 

    யுத்தம் முடிவடைந்துள்ள  10 ஆண்டுகளில் நாட்டில் மதங்களுக்கு இடையே முரண்பாடுகள் உள்ளன என்று காட்டுவதற்குரிய நடவடிக்கைகளே அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்களின் அணுசரணையுடன் நடைபெற்று வந்துள்ளன. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மையாகும். 

    இந்நிலையில் இத்தாக்குதல்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உரையாற்றும் போது, இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்புகள் உள்ளதா? இன ரீதியில் நாம் அனைவரும் பிளவுபட்டுள்ள காரணத்தை பயன்படுத்தியும், அரசியல் ரீதியாக எம்மத்தியில் பிளவுகள் காணப்படுவதை அறிந்து கொண்டும் இந்த  தாக்குதல் இடம்பெற்றுள்ளனவா என்ற கேள்விக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும்.  புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார். நாட்டை இன்றைய நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமாயின் நாம் இலங்கையர் என்று ஒற்றுமைப்படுதல் வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கமும், எதிர்க் கட்சியும் எடுக்க வேண்டும். 

    இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடைபெறவுள்ளதென்று இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸ்மா அதிபருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே அறிவித்துள்ளது. இந்த ஆபத்துப் பற்றி பொலிஸ்மா அதிபரினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கோ தெரிவிக்கப்படவில்லை என்று பாரியதொரு குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொலிஸ்மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் இராஜினாமாச் செய்யுமாறு கேட்கும் அளவிற்கு இது பூதாகாரகியுள்ளது. 

    மேலும், இந்தியாவும் இத்தாக்குதல்கள் பற்றி அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது. தாக்குதல்தாரிகளின் பெயர்களையும் தெரிவித்துள்ளது. ஆயினும், தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ளவில்லை. எதற்காக பாதுகாப்பு விடயத்தில் இவ்வாறு நடந்து கொள்ளப்பட்டுள்ளதென்று சிந்திக்க வேண்டியுள்ளது. முன்னராக புத்தளம் மாவட்டத்தில் வனாத்தவில்லு பிரதேசத்திலிருந்து பாரியளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ வனாத்தவில்லு பிரதேசத்தில் பாரியளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளமையால் இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்தியொன்று செயற்படுவது தெளிவாகின்றது. சில வெளிநாட்டு சக்திகளின் ஆலோசனையுடனும், ஆதரவுடனும் முஸ்லிம் அடிப்படைவாத, தீவிரவாத நடவடிக்கையொன்று இந்நாட்டில் ஆரம்பமாகின்றது என்பது மறைக்க முடியாத உண்மையாகும். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் சமாதானமாக, அமைதியாக வாழ விரும்புபவர்கள். இந்த மக்களின் மீதே இந்த பயங்கரவாதத்தின் பார தூரம் தாக்கம் செலுத்தப் போகின்றதென்று தெரிவித்திருந்தார். இன்று அதுவே நடந்துள்ளது. இதன் போதும் அரசாங்கம் முறையாக இவ்விவகாரத்தை கையாளவில்லை. அது மட்டுமன்றி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆதாரங்களின் அடிப்படையில் ஸஹ்ரான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் முறையீடு ஒன்றையும் செய்தாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். ஆதலால், அரசாங்கத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதற்காக இவ்விடயத்தில் உhயி நேரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று சந்தேகங் கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கம் அல்லது பாதுகாப்பு தரப்பினர் உரிய வேளைக்கு செயற்பட்டிருந்தால் 253 பேரின் உயிர்களையும் பாதுகாத்திருக்க முடியுமென்று எதிர்க் கட்சியினர் தெரிவித்துள்ளமையையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. 

    இதே வேளை, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை தற்கொலை குண்டுதாரிகளின் உடல்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்று விடுமொ என்ற அச்சத்தில் பல இடங்களில் முஸ்லிம்கள் ஜும்ஆத் தொழுகையை நடத்தவில்லை. இதன் மூலமாக முஸ்லிம்களிடையே பாதுகாப்புக் குறித்து ஏற்பட்டுள்ள அச்சநிலையை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு முன்னர் முஸ்லிம்களின் மீது ஏற்பட்ட எந்தவொரு நெருக்கடியான சூழலில் கூட வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றாதிருக்கவில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

    முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்ட போது முஸ்லிம்கள் பொறுமையாக செயற்பட்டார்கள். பலி வாங்க வேண்டுமென்று களத்தில் குதிக்கவில்லை.  மனக்கசப்புக்களுக்கு மத்தியில் எல்லா இனங்களுக்கு இடையே ஒற்றுமையை முடிந்த வரை கட்டி காத்து வந்துள்ளார்கள்.  அந்த நிலை இன்றைய காலத்தில் இன்னும் அழுத்தமாக இருக்க வேண்டும். பயங்கரவாதிகளின் சதிகளுக்குள் அகப்பட்டு இனங்களுக்கு இடையிலான உறவையும், நாட்டையும் சீரழிக்க அனுமதிக்க முடியாது. சகல இனங்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டால்தான் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீள முடியும். 

    அரசாங்கம் தாக்குதல்களின் பின்னர் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது. அரசாங்கம் மேற்கொண்;ட பாதுகாப்பு நடவடிக்கைகள், ஊரங்குச் சட்ட அமுலாக்கம், சமூக வலைத் தளங்களை இடை நிறுத்தி வைத்துள்ளமை மூலமாக இனங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படாததொரு நிலையை ஏற்படுத்தியதோடு, அச்சத்தோடும், கவலையோடும், துக்கத்தோடும் இருந்த முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் சிறப்பாக எடுத்துள்ளமையை முஸ்லிம்கள் நன்றியுடன் பார்க்கின்றார்கள்.  இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் ஏனைய சமூகத்தவர்களுக்கும் முஸ்லிம்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளார்கள். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மீள முடியாத துயரம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top