முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமர் மஹிந்தவின்
வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று
முன்னெடுக்கப்பட்டது.
பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையை முன்னிட்டு பலாத்கார தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறி குறித்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்றது.இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்."எங்கள் உணர்வுகளை மதித்து வர்த்தமானியை உடன் வெளியிடுங்கள்" - ரிஷாட் பதியுதீன்
அமைதியை விரும்பும் ஒரு சமூகத்துக்கு தொடர்ச்சியாக அநியாயம் செய்வதை நிறுத்தி, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானியை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கொவிட்19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் பலவந்த ஜனாஸா எரிப்பை
நிறுத்தக்கோரி, கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய அமைப்பின்
ஏற்பாட்டில், இன்று (23) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக
இடம்பெற்ற மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த
அவர் மேலும் கூறியதாவது,
“இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்கள், கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு கட்சிகள், இஸ்லாமிய அமைப்புக்கள், சமூக நல இயக்கங்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டமை, எங்களின் மத உரிமையை பெற்றுக்கொள்வதற்காகவே. அதிகாரத்தை பயன்படுத்தி, தொடர்ந்தும் இந்த அரசாங்கம் எமது சமூகத்துக்கு இழைத்து வரும் அநியாயங்களால் மக்கள் வேதனையில் வாழ்கின்றனர்.
நாங்கள் இந்த அரசாங்கத்திடம் எதுவுமே கேட்கவில்லை. கொவிட்19 தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யுமாறு மட்டுமே வேண்டி நிற்கின்றோம். ஆனால், நீங்கள் தொடர்ந்தும் இந்த விடயத்தில் கல்லாகவே நிற்கின்றீர்கள். ஒரு சமூகத்தின் மத உரிமையை நசுக்கும் இந்த இழி செயலை இனியாவது கைவிடுங்கள். எங்கள் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி தந்து, எங்களை நிம்மதியுடன் வாழ விடுங்கள்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியை கண்ணியமாக மதித்து, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். பல்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய வைத்தியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை இரண்டு மாதங்களாக ஏன் முடக்கி வைத்திருக்கின்றீர்கள்? அந்த அறிக்கையில் கூறப்பட்டவாறு அதனை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுங்கள்.
இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக இந்தக் கொடூரத்தை நீங்கள் தொடர்ந்தேர்ச்சியாக நிகழ்த்தினால், இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது எந்தக் காலத்திலும் சாத்தியப்படாது என்பதை மட்டும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment