• Latest News

    October 31, 2013

    நான் விரும்பாமல் என்னை யாராலும் பதவி விலக்க முடியாது; மேயர் சிராஸ் சூளுரை

    நிந்தவூர் ;
    நான் விரும்பி கல்முனை மாநகர மேயர் பதவியை இராஜினாமாச் செய்யாமல் என்னை யாரும் மேயர் பதவியில் இருந்து விலக்க முடியாது. மக்களுக்காகத்தான் கட்சி. மக்கள் இல்லையென்றால் கட்சியுமில்லை, மக்கள் பிரதிநிதிகளும் இல்லை. கட்சி என்னை நடு வீதியில் நிற்க வைக்கப் பார்க்கின்றது.
    கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை இராஜினாமா செய்யுமாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் மேயர் சிராஸ் மீராசாஹிவுவிடம் கேட்டுக் கொண்டதனை அடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளின் பின்னர், சாய்ந்தமருது மக்களின் அபிப்ராயத்தினை கேட்டறிந்து கொள்ளுவதற்காக மேயர் சிராஸினால் 30.10.2013 இரவு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தலைமை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் உரையாற்றினார்.
    சாய்ந்தமருது லீமெரிட்டேரியன் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
    இன்று நான் மக்களின் நீதிமன்றத்தின் முன் நின்று கொண்டிருக்கின்றேன். கல்முனை மாநகர சபைத் தேர்தலில் எனக்கு நீங்கள் 16ஆயிரத்து 457வாக்குகளை அளித்து கல்முனை மாநகர சபையின் மேயராக பலத்த போராட்டங்களின் மத்தியிலும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் அதன் தலைமைக்கும் நீங்கள் கொடுத்த அழுத்தங்களின் காரணமாகவே மேயர் பதவி எனக்கு கிடைத்தது. மேயர் பதவி கிடைத்த நாள் முதல் குல்முனை மாநகர சபையினை சர்வதேச ரீதியில் பேசும் வண்ணம் மிகவும் நேர்மையாக செயற்பட்டுள்ளேன்.
    முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எனது திறமை, ஆளுமை எல்லாவற்றையும் நன்கு அறிந்து வைத்துள்ளார். இங்குள்ளவர்களை விடவும் நான் தலைமைக்கும், கட்சிக்கும் மிகவும் விசுவாசமாகவே இருந்து கொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் நான் கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருப்பேன்.
    மேயர் பதவியை நான் இரண்டு வருடங்களுக்கு மட்டும்தான் பெற்றுக் கொண்டு வந்துள்ளதாகவும், அதற்காகன ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகவும் சிலரும், ஊடகங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
    கல்முனை மாநகர சபையின் தேர்தல் முடிந்ததன் பின்னர் மேயர் பதவியை வழங்குவதில் ஏற்பட்ட குழப்ப நிலையினை அடுத்து, தலைவர் என்னை அழைத்தார். இதன் போது தலைவருடன் கட்சியின் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர்களும் இருந்தார்கள். இச்சந்திப்பின் போது, இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமாக இருந்தால், நீங்கள் இரண்டு வருடங்களுக்கு இருங்கள் பின்னர் நிஸாம் காரியப்பருக்கு வழங்குவோம். பிரச்சினையை சமாளிப்பதற்கு இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் பின்னர் அதனைப் பார்ப்போம் என்று தலைவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் பிரச்சினையை சமாளிப்பதற்கு தலைவரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டேன். இதுதான் நடந்தது. மற்றப்படி இரண்டு வருடங்களுக்கு மாத்திரம் மேயர் பதவி என்று ஏற்று எந்த எழுத்து மூல ஒப்பந்தத்திலும் நான் கைச்சாத்திடவில்லை.
    கல்முனை மாநகர சபைத் தேர்தலில் நான் போட்டியிட்டு, கடுமையாக உழைத்ததன் காரணமாக 10ஆக இருந்த மாநகர சபையின் ஆசனங்களை 11 ஆசனங்களாகப் பெற்றுக் கொடுத்தேன். மிகவும் நலிவடைந்து இருந்த மாநகர சபையை சிறப்பாக கட்டி எழுப்பியுள்ளேன். மேயர் பதவி மூலமாக பணம் உழைக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது. எனது 26 வயதில் அல்லாஹ் பணத்தை தந்துள்ளான். மூன்று மொழிகளையும் சரளமாக பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளேன். முhநகர சபை மூலமாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றே ஆசைப்படுகின்றேன். ஆனால், மாநகர சபைக்கு வந்ததன் பின்னர்தான் அதுவொரு ஊத்தை என்று தெரிந்து கொண்டேன். ஏன் இங்கு வந்தேன் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அங்கு இருந்தவர்கள் எவரும் நல்ல பெயரை எடுத்தது கிடையாது. நல்லவர்களையும் கெட்டவர்கள் என்றே பேசுகின்றார்கள்.

    நான் பிரதேசவாதம், இனவாதம் பார்த்தது கிடையாது. உறுப்பினர்களுக்குரிய பங்கை பகிர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு எதிரிகள் நமது கட்சிக்குள்ளேயும், இந்த ஊரிலும்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டுமென்று நினைக்கின்றார்கள்.
    மேயர் பதவியை இன்றும் துறப்பதற்கு நான் தயாராகவே இருந்து கொண்டிருக்கின்றேன். இதனை தலைவர் கேட்ட போதே என்னால் செய்திருக்க முடியும். ஆனால், நீங்கள் தந்த அமானிதத்தை என் விருப்பம் போல் செய்து விட்டு, சாய்ந்தமருது மக்களாகிய உங்களின் முகஙடகளை எப்படிப் பார்ப்பது என்ற பயத்தின் காரணமாக, மக்களிடம் கேட்டுவிட்டு, எனது முடிவினைத் தெரிவிக்கின்றேன் என்று கூறி விட்டு வந்துள்ளேன். இப்போது நீங்கள் என்ன முடிவினைச் சொல்லுகின்றீர்களோ அதற்கு நான் கட்டுப்படுவேன்.
    ஆனால், எனக்கு இருக்கின்ற கவலை எல்லாம் என்னால் ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா, கல்முனை பொதுச் சந்தையின் அபிவிருத்தி மற்றும் பிற அபிவிருத்திப் பணிகள் எல்லாம் தடையாகிப் போய்விடுமே என்பதேயாகும்.
    நான் அமைச்சர்கள். வேளிநாட்டுத் தூதுவர்கள் போன்றவர்களுடன் எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளைப் பற்றி பேசியுள்ளேன். அவர்கள் உதவி செய்வததாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். நான் ஒரு பொம்மை மேயராக இருக்க வேண்டுமென்று கட்சிக்குள் பலர் நினைக்கின்றார்கள். அதற்கு நான் தயாராகயில்லை.
    எனது மனட்சாட்சிக்கு விரோதமில்லாத வகையில் இந்த இரண்டு வருடங்களை கழித்துள்ளேன். கட்சிக்கு என்னால் முடிந்த பணிகளைச் செய்துள்ளேன். ஆனால், கட்சி என்னை நாடு வீதியில் நிற்க வைக்கப் பார்க்கின்றது. மக்களுக்காகத்தான் கட்சி. மக்கள் இல்லையென்றால் கட்சியுமில்லை, மக்கள் பிரதிநிதிகளும் இல்லை.
    மேயர் பதவியினை இராஜினாமாச் செய்வது பற்றி பேசிய போது, எனக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக்கள் வழங்குவதாக மறைமுகமாகச் சொன்னார்கள். அத்தோடு, அரசாங்கத்தில் உயர் பதவி ஒன்றினைப் பெற்றுத் தருவதாகவும் கூறினார்கள்.
    நான் ஜனாதிபதியையும், தேர்தல் ஆணையாளரையும் சந்தித்ததாக கூறுகின்றார்கள். ஜனாதிபதியை சந்தித்தது உண்மை. எனது கல்லூரியின் திறப்பு விழாவிற்கு அவரை அழைப்பதற்காகச் சென்றேன். இதில் என்ன தவறு இருக்கின்றது. அப்போது அங்கு தலைவர் வந்ததும் உண்மை. நான் வேறு வழியால் சென்றதும் உண்மை. அங்கு வருவதற்கு ஒரு வழி, போவதற்கு இன்னொரு வழி என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையாளரைச் சந்தித்ததும் உண்மை. என்னை மேயராக அறிவித்த வர்த்தகமானி என்னிடம் இல்லை அதனைப் பெற்றுக் கொள்வதற்காகவே சென்றேன். அத்தோடு, மேயர் பதவியினைப் பற்றியும் கேட்டு சில சட்டதிட்டங்களை அறிந்து கொண்டேன். அவர் நீங்கள் இராஜினாமாச் செய்யமால் எதுவும் செய்ய முடியாதென்று கூறினார்.


















    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நான் விரும்பாமல் என்னை யாராலும் பதவி விலக்க முடியாது; மேயர் சிராஸ் சூளுரை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top