• Latest News

    October 31, 2013

    மேயர் பதவி மறுக்கப்படுமாயின் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை வேண்டும்; மாநகர சபையின் உறுப்பினர் எம்.ஐ.பிர்தௌஸ்

    கல்முனை;
    கல்முனை மாநகர சபையின் மேயர் பதவியை இந்த மண்ணுக்கு நான்கு வருடங்களுக்கு தருவதற்கு மறுக்கப்படுமாயின் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபையினை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதான் கல்முனை மாநகர சபையின் மேயர் விவகாரத்தில் எமது நிலைப்பாடாகும்.
    இவ்வாறு, கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.ஐ.பிர்தௌஸ் (மு.கா) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் கல்முனை மேயர் பதவி பற்றி எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'யார் பிழை செய்தாலும் அதனை நான் தட்டிக் கேட்பேன். எமது சாய்ந்தமருது மண்ணுக்கு கிடைத்ததொரு செல்வம்தான் சிராஸூம் மேயர் பதவியுமாகும். நான் முதலில் சிராஸை எதிர்த்தவன். ஆயினும், தலைவர் இவரை தேர்தலில் போட்டியிடச் செய்ய விருப்பங் கொண்டார்.
    சிராஸை மேயர் பதவியில் இருந்து நீக்கினால்தான் தங்களின் அரசியல் பலமாக இருக்குமென்று சிலர் நினைக்கின்றார்கள். நான் தலைவரையும், கட்சியையும் எதிர்ப்பதாகக் கூறுகின்றார்கள். தலைவரிடம் சில கேள்விகளை கேட்டால், கட்சியை எதிர்க்கின்றேன் என்று அர்த்தமா என்று கேட்கின்றேன்.
    நான் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதயில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு கட்டத்தில் நான் கட்சியில் உங்களை விடவும் முந்தி வந்தவன் என்று தலைவரிடம் கூறினேன். (பலத்த கரகோசம்) இந்த மண்ணுக்கு கிடைத்துள்ள ஒரு சிறந்த தலைவனை நான் எதற்காக எதிர்க்க வேண்டுமென்று கேட்கின்றேன்.
    இன்றைய தலைவருடன் மட்டுமன்றி, தலைவர் அஸ்ரப்புடனும் முரண்பட்டுள்ளேன். அவர் என்னை கட்சியிலிருந்து இடைநிறுத்தியும் வைத்துள்ளார். பிழை யார் செய்தாலும் கேட்பேன். பாராளுமன்ற கட்டடித் தொகுதயில் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்து வருகின்ற போது, நான் எனது நிலைப்பாட்டில் இருந்து மாற மாட்டேன் என்று சொன்னேன்.
    சிராஸ் கட்சிக்கு புதியவர் என்று கூறி மேயர் பதவி எடுக்க எண்ணுகின்றார்கள். 1994ஆம் ஆண்டு மருதமுனையைச் சேர்ந்த ஐ.ஏ.ஹமீட் கட்சிக்கு புதியவராக வந்து போட்டியிட்டு, அதிக வாக்குகளைப் பெற்று கல்முனை பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டார். அவரை விடவும் கட்சியில் மூத்;தவராக இருந்த ஜவாத் இரண்டாம் நிலையில் இருந்தார். அவருக்கு தவிசாளர் பதவி வழங்கப்படவில்லை. தொடர்ச்சியாக ஹமீட் தவிசாளராக இருந்தார்.
    ஹரீஸ் வந்த போது டம்மியோ வேறு என்னமோ மாறி மாறி அவர்களே மேயர் பதவியை வைத்துக் கொண்டிருந்தார்கள். ஏன் ஏனைய ஊர்களுக்கு மேயர் பதவியை பங்கு போட்டுக் கொடுக்கவில்லை.
    கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியாக கட்சியின் செயலாளர் ஹஸன்அலி தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றார். அவர் ஏன் இரண்டு வருடங்களுக்கு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில ஹஸன்அலியின் எம்.பி பதவியை இராஜினாமாச் செய்து விட்டு, நிஸாம் காரியப்பருக்கு இரண்டு வருடங்கள் வழங்குங்களேன் என்று நான் கேட்ட போது, அவர் சொன்னார் எனக்கு மேயர் பதவிதான் வேண்டுமென்றார். அடுத்த தேர்தலில் மேயராக நான்கு வருடங்களுக்கு நீங்கள் இருங்கள் அதற்கான உத்தரவாதத்தை நாங்கள் தருகின்றோம் என்று கூறிய போது. இல்லை, எனக்கு இப்போதே வேண்டுமென்றார்.
    முஸ்லிம் காங்கிரஸின் இதயம் அம்பாரை மாவட்டமாகும். அம்பாரை மாவட்டத்தின் இதயம் கல்முனைத தொகுதியாகும். கல்முனைத் தொகுதியின் துடிப்பு சாய்ந்தமருதாகும். இந்த இதயத் துடிப்புக்கு கட்சியின் கொள்கையை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கேட்கின்றேன். என்றார்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மேயர் பதவி மறுக்கப்படுமாயின் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை வேண்டும்; மாநகர சபையின் உறுப்பினர் எம்.ஐ.பிர்தௌஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top