இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதற்காக, இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும்
பயணிகள் அணிந்து செல்லக்கூடிய தங்க ஆபரணங்களின் அளவுக்கு அரசாங்கம்
அண்மையில் கட்டுப்பாடு விதித்தது.
அண்மைக் காலங்களில் இந்தியாவுக்கு தங்கம்
கடத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்தமையாலேயே இந்த புதிய கட்டுப்பாடு என்று
இலங்கை சுங்கப்பிரிவு பிபிசியிடம் கூறியுள்ளது.
இதன்படி, பெண் பயணிகள் 15 சவரண் தங்க நகைகளை மட்டுமே அணிந்துசெல்ல முடியும். ஆண்களும் சிறார்களும் 5 சவரண்களை அணிந்துசெல்லமுடியும்.
ஆனால், அதுவும் அந்த நகைகள் எல்லாம் மீண்டும் நாட்டுக்கு வரும்போது திரும்பி வரவேண்டும் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட வேண்டும்.
இந்த தங்க நகைகள் செய்து முடிக்கப்படாத அல்லது
ஆபரணங்கள் அல்லாத வேறு வடிவங்களில் காணப்பட்டாலும் அவற்றை கொண்டுசெல்ல
முடியாது என்று இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜீ.ஏ. லெஸ்லி
காமினி பிபிசியிடம் கூறினார்.
இலங்கைக்கு வந்துசெல்லும் வெளிநாட்டுப் பயணிகளும்
தாங்கள் கொண்டுவரும் தங்க ஆபரணங்களை விமான நிலையத்திலேயே அதிகாரிகளிடம்
காட்டிவிட்டுச் செல்லவேண்டும்.
திரும்பிச் செல்லும்போது சுங்க அதிகாரிகளிடம்
ஏற்கனவே காட்டப்படாத ஆபரணங்கள் காணப்பட்டால், தாங்கள் கொண்டுவந்த பணத்தில்
தான் அவை வாங்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்த வெளிநாட்டு நாணயமாற்று
கட்டுப்பாட்டாளரின் அனுமதிக்கான ஆவணங்களையும் விமானநிலையத்தில் காட்ட
வேண்டியிருக்கும்.
சில நாட்களுக்கு முன்னர் தங்கம் கடத்திச் செல்லும் வழியில் இந்தியாவின்
கொச்சின் விமானநிலையத்தில் பிடிபட்ட 53 பேர் கொழும்பிலிருந்து தான்
புறப்பட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தங்கம் விலை குறைவு
இந்தியாவை விட இலங்கையில் தங்கம் விலை
குறைந்திருப்பதே கடத்தல் வியாபாரிகள் இலங்கையை தங்களின் களமாக
தேர்ந்தெடுக்க காரணம் என்று இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த கே.
சங்கர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இந்தியாவில் தங்கத்தின் விலையை இந்திய மத்திய
வங்கி நிர்ணயிப்பதாலும், இலங்கையில் சர்வதேச சந்தையின் அடிப்படையில்
விலைகள் நிர்ணயிக்கப்படுவதாலுமே இலங்கையில் தங்கத்தின் விலை
குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் கஸினோ போன்ற சூதாட்டங்களில்
ஈடுபடுவோர் பணத்தை கொண்டுசெல்வதற்கான மாற்றுவழியாக தங்கத்தைப் பயன்படுத்தி
வந்துள்ளமையும் கடத்தல்களுக்கு முக்கிய காரணமாகி இருப்பதாக அவர் கூறினார்.
அரசின் புதிய கட்டுப்பாடுகள் தங்கம் கடத்தப்படுவதை வெகுவாக கட்டுப்படுத்த உதவும் என்றும் சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுங்கத் திணைக்களத்தின் புதிய கட்டுப்பாடுகள்,
உள்ளூர் நகை வியாபாரத்தை பெரிய அளவில் பாதிக்காது என்றும் இந்தியாவுக்கு
தங்கம் கடத்திச் சென்று லாபம் பார்க்கும் வியாபாரிகளைத் தடுக்கும் என்றும்
இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் கூறுகிறது.
BBC-
0 comments:
Post a Comment