• Latest News

    December 29, 2013

    கல்முனை மாநகர சபையின் வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்?

    சஹாப்தீன்-
    கல்முனை மாநகர சபையின் புதிய மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தனது முதலாவது வரவு-செலவு திட்டத்தினை எதிர்வரும் 31ஆம் திகதி மாநகர சபையின் அமர்வின் போது சமர்ப்பிக்க உள்ளார். ஆயினும், 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தினை நிறைவேற்றிக் கொள்வதில் அவர் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார். கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்கின்ற முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களில் சிலர் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் வரவு-செலவு திட்டத்தினை தோற்கடிக்க இருக்கின்றார்கள் என்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவே தெரிகின்றது. இதன் காரணமாகவே கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டத்தினை நிறைவேற்றிக் கொள்வதில் மேயர் நிஸாம் காரியப்பர் தலையிடிக்கு ஆளாகியுள்ளார்.

    கல்முனை மாநகர சபை 19 உறுப்பினர்களைக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸ் 11 உறுப்பினர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 04 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 03 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி 01 உறுப்பினரையும் கொண்டுள்ளது.

    கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் கடந்த 2013.12.23ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 2.30 மணிக்கு சபையின் அமர்வு நடைபெறும் என்றும், அதில் மேயரினால் முன் வைக்கப்படுமென்று உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டன.

    ஆயினும், அன்றைய தினம் இறுதி நேரத்தில் சபை அமர்வு 2013.12.31 செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனை, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான முன்னாள் மேயர் சிராஸ் மஐராசாஹிவு, அமீர், பிர்தௌஸ், நிஸார்தீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான முபீத்(அ.இ.மு.கா), ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான நபார் ஆகியோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சபை அமர்வினை ஒத்தி வைத்தமையை ஏற்றுக் கொள்ள முடியாதென்று உரத்துக் கேள்விகளைக் கேட்டார்கள். இதனால், கல்முனை மாநகர சபையின் சபா மண்டபத்திற்கு முன் பொது மக்கள் திரண்டார்கள். பொலிஸார் அழைக்கப்பட்டார்கள். கல்முனை மாநகர வளாகம் கூச்சல்களாலும், குழப்பங்களாலும் நிறைந்திருந்தது.

    இறுதி வேளையில், வரவு-செலவு திட்டத்தினை ஒத்தி வைத்தமைக்கான காரணம் என்னவென்று மேயர் நிஸாம் காரியப்பரிடம் கேட்ட போது, வரவு-செலவு திட்டத்தின் நகல் பிரதி குறைந்தது 07 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை. இதனை, சில உறுப்பினர்கள் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்டு, அந்த அவகாச நாட்களை வழங்கும் வகையில் வரவு-செலவு திட்டத்தினை சமர்ப்பிக்கும் அமர்வினை ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.

    ஆனால், மேலே உள்ள 10 உறுப்பினர்களும் வரவு-செலவு திட்டத்தினை தோற்கடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்ற காரணத்தினால்தான் 23ஆம் திகதி நடைபெற இருந்த வரவு-செலவு திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வரவு-செலவு திட்டத்தின் போது நடுநிலை வகிப்பார்கள் என்ற சமிக்கையை காட்டிவிட்டு, இறுதி நேரத்தில் வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க இருந்ததாகவும், அவர்களுடன் இணைந்து, மேற்சொன்ன உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க திட்டமிட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடுநிலை வகித்தால், வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதென்றும், எதிராக வாக்களிக்க இருந்தால், எதிர்த்து வாக்களிப்பதென்றும் சிராஸ் மீராசாஹிவு தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் முடிவுகளை எடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    இதுபற்றி, மேற்படி உறுப்பினர்களைக் கேட்டால், தாங்கள் அவ்வாறான முடிவுகளை எடுக்கவில்லை என்று கூறுகின்றார்கள். அப்படியாக, இருந்தால், ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தினை இன்றே நடத்த வேண்டுமென்று மாநகர சபையின் ஆட்சியாளர்களாக உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் கேட்டு பிரச்சினையில் ஈடுபட்டுக் கொண்டது எதற்காக என்பது சந்தேகங்களையே ஏற்படுத்துகின்றது. எப்படியாக மாநகi சபையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களிடையேஈ கூட்டுப் பொறுப்பையும், தலைமைத்துவக் கட்டுப்பாட்டையும் காண முடியாதுள்ளது.

    இதே வேளை, முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிவு பிரதி மேயராக இருக்கின்றார். ஆனால், அவருக்குரிய அலுவலக அறையில் தளபாடங்கள், பெயர்ப் பலகை போன்ற இல்லாதிருப்பது, அவை வேண்டுமென்று அகற்றப்பட்டு இருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதி மேயராக இருந்த நிஸாம் காரியப்பர், சிராஸ் மீராசாஹிவு மேயர் பதவியை இராஜினாமாச் செய்ததன் காரணமாக தற்காலிக மேயராக இருக்கின்ற அதே வேளை, பிரதி மேயராகவும் இருக்கின்றார் என்று மாநகர சபையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    ஆணையாளரின் இக்கருத்து சட்டரீதியாக சரியாக இருந்தாலும், பிரதி மேயருக்கென்று ஏற்கனவே இருந்த அலுவலகத்தில் உள்ள வசதிகளை இல்லாமல் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை வேண்டுமென்று செய்யப்பட்டதொரு வேலையாகவே சிராஸை சார்ந்தவர்கள் எண்ணுகின்றார்கள்.

    இதே வேளை, சபையின் அமர்வினை ஒத்தி வைத்தமையை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பிரச்சினைப்படுத்தினால், அது அவர்களின் தேவையாகவே இருக்கும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களே ரகலை பண்ணும் போது, அவர்களிடையே கூட்டுப் பொறுப்பு இல்லை என்பது தெளிவாகின்றது. தங்களின் தேவைகளை எழுத்து மூலம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். மறுக்கப்படும் போது, கட்சியின் தலைவருக்கும், உள்ளுராட்சி அதிகாரிகளுக்கும் அறிவிக்கலாம்.

    கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களிடையே இப்போது ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை, முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிவுவின் காலத்திலும் இருந்துள்ளது. அவரின் நடவடிக்கைகளையும்  முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் சிலர் ஏற்றுக்  கொள்ளவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

    ஆக, கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களிடையே இரண்டு குழுக்கள் செயற்பட்டு வந்துள்ளன. அந்த செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கல்முனையில் தோன்றியுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களிடையே பிளவுகள் இருக்கக் கூடாது. ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

    அதே போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும், ஏனைய உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். கல்முனை மாநகர சபையில்  ஒற்றுமையும், புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்பும் உறுப்பினர்களிடையே காணப்படும் போது, கல்முனையில் தோன்றியுள்ள தமிழ்ப் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்திக் கொள்வதனை இலகுவாக்கிக் கொள்ளலாம்.

    கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தினை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களும், எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்களும் தோற்கடிக்க உள்ளார்கள் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திக்கே கல்முனைத் தொகுதியில் பரபரப்பும், மோசமான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றமையை நாம் கேட்க முடிந்தது.

    இன்றைய அரசியல் நெருக்கடியில் கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் கல்முனைத் தொகுதி தமிழர் என்றும், கல்முனைக்குடி என்றும், சாய்ந்தமருது என்றும் பிளவுபடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறு பிளவுகள் ஏற்படும் போது. இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு பதிலாக பிரச்சினைகளை அதிகரிக்கவே செய்யும்.

    கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் ஸ்திரத்தில் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மட்டுமன்றி முஸ்லிம் காங்கிரஸிற்கும் தலைக் குனிவை ஏற்படுத்துவதாக இருக்கும். பொத்துவில் பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட இருந்தது. ரவூப் ஹக்கிமின் தலையீட்டினால் பொத்துவில் பிரதேச சபையின் வரவு-செலவு திட்டம் வெற்றி பெற்றது. அதே போன்று கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டத்திற்கு ரவூப் ஹக்கிம் மற்றும் ஹரிஸ் ஆகியோர்களின் தலையீடுகள் அவசியமாகியுள்ளது.

    புதிதாக வந்துள்ள கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர் பதவி ஏற்ற போது. இதே பத்தியில் முரண்பாடுகளையுடைய கல்முனை அரசியலில் நிஸாம் காரியப்பர் எப்படி பயணிக்கப் போகின்றார் என்று கேள்வி எழுப்பி இருந்தோம். அந்தக் கேள்வியில் உள்ள உண்மைத் தன்மையை நிஸாம் காரியப்பர் இப்போது புரிந்திருப்பார் என்று நினைக்கின்றோம்.

    அரசியலில் அவ்வப்போது ஏற்படும் சூதுகளையும், வாதுகளையும் தெரிந்து கொள்ளாது அரசியலில் காலூன்ற முடியாது. நிஸாம் காரியப்பர் இவற்றினை அறிந்து கொள்ளாதவராகவே இருக்கின்றார். முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு சிறந்த ஆலோசகர்கள் இருப்பதில்லை. கூடிக் கலைகின்றவர்களை வைத்துக் கொண்டே அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு நிஸாம் காரியப்பரும் உள்ளார் என்பதே எமது கணிப்பீடாகும். இந்த உண்மை சில வேளை கசப்பாகவும் இருக்கலாம்.

    எவ்வாறாயினும், கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு தி;ட்டம் 31ஆம் திகதி முன் வைக்கப்படும் போது, அதன் வெற்றியும், தோல்வியும் கல்முனை அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதே எமது கருத்தாகும்.
    வீரகேசரி வாரவெளியீடு 2013.12.29
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையின் வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top