தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் சர்வதேசத்துடன் இணைந்து இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு துணை போகின்றனர் எனக் குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் எமக்கெதிரான பிரேரணையை நிறைவேற்றுவதோடு சர்வதேச விசாரணையும் நிச்சயம் இடம்பெறும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,அரசாங்க அதிகாரிகள் அதுவும் தமிழ் அதிகாரிகள் மூலமாக வடக்கில் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. எனவே அதன் புள்ளி விபரங்கள் பிழையாக இருக்காது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இந்தப் புள்ளி விபரங்களில் உண்மைத் தன்மை இல்லையென்கின்றன. இதனை கடுமையாக எதிர்க்கின்றோம். கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் இம் முயற்சியானது இலங்கைக்கு எதிராக ஐ.நா.வுக்கு உதவி செய்வதே ஆகும்.
அது மட்டுமல்லாது கூட்டமைப்பு வடக்கில் சாட்சியங்களை திரட்டி அறிக்கையொன்றை தயாரித்துள்ளது. இதில் அடங்கிய காணாமல் போனவர்கள் கொலைகள் தொடர்பான தகவல்களில் உண்மையில்லை. இவ்வாறு இலங்கைக்கு எதிராக தயாரிக்கும் அறிக்கையை கனடாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் ஊடாக மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் சமர்ப்பிக்கப் போகின்றனர்.
இதற்கு அரசின் பங்காளிகளாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸும் துணை போகின்றது. இது தேச விரோதமாகும். அரசில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேசத் துரோகத்திற்கு துணை போகக்கூடாது.
அது மட்டுமல்லாது அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் சர்வதேச பொருளாதார தடை வரும் என்கிறார். இந்த முக்கூட்டும் இணைந்து இலங்கையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு துணை போகின்றனர்.
இது தோற்கடிக்கப்பட வேண்டும். அதேவேளை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் எமக்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதும் சர்வதேச விசாரணையும் நிச்சயமாகும். ஆனால், அதற்கு முகம் கொடுப்பதற்கு அரசு தயாராகுவது தெரியவில்லை. இதுவரையில் எதுவிதமான நிலைப்பாட்டையும் எடுக்க வில்லை என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
0 comments:
Post a Comment