• Latest News

    May 20, 2014

    அரசாங்கத்தோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாம்: ரவூப் ஹக்கிம்

    இன்றுள்ள நிலைமையை பார்க்கும் போது அரசாங்கத்தோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணையாமலேயே; இருந்திருக்கலாமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.

    முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினருமான எல்.எம்.என். முபீன் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டது. கட்சியைப் பாதுகாக்க வேண்டுமானால் நாம் கட்டாயம் அரசாங்கத்துடன் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    அப்போது அரசாங்கத்துடன் இணைவது தான் பொருத்தமென கட்சியின் பெரும்பாலனவர்கள் வற்புறுத்தினார்கள். அப்பொழுது கட்சியையும், கட்சியில் எஞ்சியுள்ளவர்களையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை காணப்பட்டதால் தான் அரசாங்கத்தில் சேர்ந்தோம்.

    இன்று அரசாங்கத்துடன் இணைந்து மூன்றரை வருடங்களாகின்றன. ஆனால் இன்றுள்ள நிலைமைகளை பார்க்கின்ற போன்ற அரசாங்கத்தோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாமென்று எண்ணத் தோன்றுகின்றது.

    கட்சி குறித்த கவலை அனைவருக்கும் இருக்கின்றது. பலவிதமான விமர்சனங்களுக்கு கட்சியின் தலைமை முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை வெறும் உணர்வு ரீதியாக அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுத்துவிட முடியாது.
    இதயபூர்வமாக கட்சி ஆதரவாளர்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டியுள்ளது. ஆதரவாளர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறவேண்டியுள்ளது. கட்சியின் அமைப்பு வேலைகளையும் பலப்படுத்த வேண்டியுள்ளது.

    அடுத்த வருடம் தேசிய மட்டத்தில் தேர்தலொன்று நடைபெறக்கூடிய சூழ்நிலையுள்ளது. அது ஜனாதிபதி தேர்தலாகவோ அல்லது பாராளுமன்றத் தேர்தலாகவோ இருக்கலாம். இன்று வரை ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவே கூறப்படுகின்றது. எனினும் இனிவரும் சூழ்நிலை மாற்றங்களைப் பொறுத்து முடிவுகள் மாறக்கூடிய நிலையுள்ளது. ஊவா மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தால் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஊவா மாகாண சபைத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட வேண்டியுள்ளது.

    மட்டக்களப்பு மாநகர சபை கலைக்கப்பட்டு ஒரு வருடமாகின்றது. அதற்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும். இம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸூக்கு அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர் ஆகியோர் உள்ளனர். அவர்களின் ஆலோசனைகளுடன் கட்சியை பலப்படுத்த வேண்டும்.

    கல்குடா தொகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பான எந்தத் தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும் அது கல்குடா தொகுதியுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்படும் என்றார்.

    இக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம் ஆகியோர் உட்பட காத்தான்குடி பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்தோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாம்: ரவூப் ஹக்கிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top