ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் இலங்கையில்
நடத்த உத்தரவிட்டுள்ள விசாரணைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம்
வழங்குவதாகவும், இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தான்
ஊக்கப்படுத்துவதாகவும் ஐநா மனித உரிமை ஆணையாளராக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இளவரசர் ஸெய்த் ரா அத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
நாளை செப்டம்பர் 8ஆம் தேதி ஜெனீவாவில்
துவங்குகின்ற ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரில் இளவரசர்
அல் ஹுசைன் ஆற்றவுருக்கின்ற துவக்கவுரையின் நகல் ஜெனீவாவில் ஊடகங்களிடம்
நேற்று வெளியிடப்பட்டதாக கூறி ஐநா மனித உரிமையாளரின் கருத்துகளை ஊடகங்கள்
வெளியிட்டுள்ளன.
இந்த ஐநா விசாரணைக்கு எந்த வகையிலும் தாம்
ஒத்துழைக்கப்போவதில்லை என்று இலங்கை கூறிவருகிறது. ஐநா விசாரணையாளர்கள்
இலங்கை வருவதற்கு விசா வழங்கவும் இலங்கை அரசாங்கம் மறுத்து வருகிறது.
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களும்,
பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் எதிர்கொண்டுவருகின்ற அச்சுறுத்தல்கள்
தனக்கு அதிர்ச்சியும் வேதனையும் தந்துள்ளதாக இந்த துவக்க உரையில் ஐநா மனித
உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறையும்
அரங்கேறிவருவதை தான் கண்டிப்பதாகவும் இளவரசர் அல் ஹுசைன்
குறிப்பிட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையிலிருந்து படகில் செல்வோர்கள் உட்பட
கடல்வழியாக ஆஸ்திரேலியா செல்லும் தஞ்சக் கோரிக்கையாளர்களை, வெளிநாடுகளில்
வைத்து ஆஸ்திரேலியா பரிசீலிப்பதையும், படகுகளை வழியிலேயே தடுத்து திருப்பி
அனுப்புவதையும் ஐநா மனித உரிமை ஆணையாளர் விமர்சித்துள்ளார்.
இப்படியான காரியங்களால் யதேச்சதிகாரமாக
தடுத்துவைக்கப்படுதல், சொந்த நாடுகளில் சித்ரவதைக்கு ஆளாக நேர்தல் போன்ற பல
மனித உரிமை மீறல்கள் வரிசையாக நடக்கக்கூடிய ஆபத்து உள்ளது என அவர்
எச்சரித்துள்ளார்.
இலங்கை தொடர்பாக கடந்த மார்ச்சில் ஐநா மனித
உரிமைக் கவுன்சில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது. இலங்கை
அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த உள்நாட்டு
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை
மீறல்கள் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை ஒன்றை
நடத்தும் என்று அந்த தீர்மானத்தில் பணிக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை
அரசாங்கம் மறுத்துவரும் நிலையில், விசாரணையில் முன்னேற்றம் எதுவும்
ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும் நடக்கவுள்ள கூட்டத்தொடரில் இந்த விசாரணை
சம்பந்தமாக ஐநா மனித உரிமைக் கவுன்சிலுக்கு ஆணையாளர் வாய்மொழியாக விவரம்
வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கமும்
ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதர் ரவிநாத ஆர்யசிங்க வழியாக பதில் அளிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.-BBC
0 comments:
Post a Comment