எஸ்.அஷ்ரப்கான் : கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தின் மாட்டிறைச்சி கடைகளினால் வெளியிடப்படும் கழிவுகளை கொட்டுவதற்காக பொருத்தமான இடவசதி இன்மையால் வீதிகள் மற்றும் பொது இடங்களில் கழிவுகள் போடப்பட்டு காணப்பட்ட அசௌகரியத்தை நீக்கும் வகையில் சாய்ந்தமருது 'அபியா குறூப் தனியார் நிறுவனம்' இலவசமாக அக்கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்துகின்ற பணியை செய்வதற்கு முன்வந்து செயற்பட்டுவருகின்றது.
இதுவரைகாலமும் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களான சாய்ந்தமருது, கல்முனை, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை போன்ற பல பிரதேசங்களிலும் இந்த இறைச்சிக்கடைகளினால் வரும் கழிவுகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடம் இல்லாத நிலையில் பொது இடங்களிலும், தெருவோரங்களிலும் இக்கழிவுகள் கொட்டப்பட்டதனால் பெரும் சுகாதார சீர்கேடு காணப்பட்டது.இதனை கருத்தில் கொண்டு குறித்த தனியார் நிறுவனம் பிரதேச மக்களின் சுகாதார மேம்பாடு கருதி கல்முனை மாநகர சபை, சுகாதார பிரிவு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். மாஹிர் மற்றும் மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி ஆகியோரின் ஆலோசனை வழிநடாத்தலில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளதாக தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். அஷ்ரப் தெரிவித்தார்.
இந்த சேவையின் மூலம் கல்முனை மாநகர சபைப்பிரதேசத்தின் நீண்டகால பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதனால் குறித்த நிறுவனத்திற்கும் கல்முனை மாநகர சபைக்கும் பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment