• Latest News

    April 08, 2020

    அம்பாரையில் முதலாவது கொரனா தொற்று நோயாளி : மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    என்.மீரா –
    அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று மாலை கொவிட் - 19 (கொரனா) வைரஸ் தொற்று நோயாளி ஒருவர் இனங் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரின் வீடும், அயல் பிரதேசமும் சுகாதாரப் பிரிவினரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேலதிகமாக பாதுகாப்பு தரப்பினரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

    இந்த கொரனா தொற்று நோயாளி பற்றி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணம் கருத்துத் தெரிவிக்கையில்,
    கடந்த 16ஆம் திகதி கட்டார் நாட்டிலிருந்து ஒரு தொகுதியினர் கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை வந்தடைந்தார்கள். இவர்கள் 16ஆம் திகதி இரவே இப்பிராந்தியத்திற்கு வந்து சேர்ந்து விட்டார்கள். 

    இவர்களை நாங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். ஆயினும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததன் பின்னரும் இவர்களுடன் வருகை தந்த வேறு பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரனா தொற்றுக்குள்ளாகி இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு அமைய நேற்று முன்தினம் நாங்கள் குறிப்பிட்ட நபருடன் வருகை தந்திருந்த 07 பேரின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தோம். அதன்படி இன்று கிடைத்த தகவல்களின் படி 07 பேரில் ஒருவருக்கு கொரனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

    உறுதி செய்யப்பட்ட இந்த தகவலையடுத்து கொரனா தொற்றுக்குள்ளானவரை இன்று (08.04.2020) வெலிக்கந்த ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். 

    அவருடைய தனிமைப்படுத்தல் நாட்கள் முடிவடைந்ததன் பின்னர் அவருடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தவர்களை அடையாளங் காணும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதன்படி கொழும்பிலிருந்து அவரை அழைத்து வந்த வானின் சாரதி உட்பட அவரது வீட்டின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 09 பேரை நாங்கள் அடையாளங் கண்டுள்ளோம். அதன்படி இந்த 09 பேரின் குடும்பங்களை அவர்களின் வீடுகளில்; தனிமைப்படுத்தப்பட இருக்கின்றார்கள்.

    இதே வேளை, நாளை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் வேளையில் இப்பிரதேசத்தில் சனநடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றோம். மேலும், இவரது வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து வீடுகளிலும் தெளிகருவிகளை பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை இன்றிரவே மேற்கொள்ள இருக்கின்றோம். அதே வேளை, இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள பொது மக்களுக்குரிய ஆலோசனைகளை ஒலி பெருக்கிகள் மூலமாக தெரிவிக்க இருக்கின்றோம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாரையில் முதலாவது கொரனா தொற்று நோயாளி : மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top